கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் நாயகன் சத்யா, ஒரு பிபிஓ வில் வேலைக்கு சேருகிறார். சென்னையின், படாடோபமான, வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார். அதற்கான பணத்தை சம்பாதிக்க தங்கச் சங்கிலி பறிக்க முடிவெடுத்து, அதன்படி நடக்கிறார். ஒரு புறம் பிபிஓ வில் வேலை செய்து கொண்டே சங்கிலி பறிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்.
இதன் தொடர்ச்சியாக, ஒரு நாள் ஜெயப்பிரகாஷின் மகளிடம் சங்கிலி பறிக்க முயலும்போது, அந்தப்பெண் பரிதாபமாக இறந்து போகிறார். ஜெயப்பிரகாஷ், தனது மகளின் பரிதாப சாவிற்கு பழிவாங்க முடிவு செய்கிறார். அதன் படி, போலீஸான ஸ்டில்ஸ் பாண்டியன், அவருக்கு உதவுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ராபர் படத்தின், பரபரப்பான கதை.
மெட்ரோ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இதில் முழு நாயகனாகி இருக்கும் சத்யா நம்பிக்கை தரும் நாயகனாகி இருக்கிறார். இயல்பான நடிப்பு அவருக்கு பிளஸ் ஆகி இருக்கிறது. அப்பாவியாக, கிளைமாக்சில் வேறொரு முகத்தை காண்பிப்பவராக நன்றாக நடித்து இருக்கிறார்
கொள்ளையை, ஒருங்கிணைக்கும் வில்லனாக டேனி. இவரும் தன் பங்கிற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.. கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பவர்களாகக் காவல்துறை அதிகாரியாக வரும் ராஜா ராணி பாண்டியனும், சத்யாவின் கொள்ளையில் உயிரை இழக்கும் இளம்பெண்ணின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷும் உள்ளனர் .
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், மிகப் பெரும்பான்மை தாய்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.மிக இயல்பாக நடித்து கலங்க வைக்கிறார். தப்பு செய்யாத சென்றாயன் மாட்டிக் கொண்டு முழிக்கும் இடங்களில் மிகையில்லா நடிப்பில் நகைச்சுவை கலந்து அசத்தியுள்ளார்.
என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் சென்னை நகரமே புதிதாகத் தெரிகிறது.செய்திகளில் பார்க்கும் கண்காணிப்புக் கருவிகளின் காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் வழிப்பறிக் காட்சிகளைப் பதிவு செய்து பதறவைக்கிறார்.
ஜோகன் சிவனேஷ் இசையில் அந்தோணிதாசன் இடம்பெறும் பாடல் சிறப்பு.பின்னணி இசையில் பதட்டத்துக்குப் பதட்டம் கூட்டியிருக்கிறார்.
சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள், திருட்டு நகையை விற்கும் கும்பல், காவல் துறையின் மெத்தனமான போக்கு, என அனைத்தையும் க்ளைமாக்ஸ் வரை, பரபரப்பான திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர், எஸ். எம். பாண்டிதெருவில் பறிக்கப்படும் நகை எப்படி கை மாறுகிறது. அந்த கும்பல் எப்படிப்பட்ட நெட் வொர்க்குடன் செயல்படுகிறது. எந்த ஏரியாவில், எப்படி செல்லும் பெ ண்களில் நகையை பறிக்கிறார்கள் என்பதை விலாவரியாக சொல்லி, நம்மை பயமுறுத்துகிறார்கள்.