ராக்கெட் டிரைவர் ; விமர்சனம்


ஆட்டோ ஓட்டுனர் ஆன விஷ்வத்துக்கு விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பது விருப்பம். ஆனால் காலம் அவரை ஆட்டோ ஓட்டுனராக மாற்றி விடுகிறது. சமூக அக்கறையுடன் இருக்கும் அவர், சிறு சிறு தவறுகள் யார் செய்தாலும் அதை கண்டு சலிப்பாகிறார். இந்த நிலையில் ஒருநாள் அவரது ஆட்டோவில் ஏறும் 16 வயது இளைஞன் தன்னை அப்துல் கலாம் என்றும் தான் டைம் டிராவல் மூலமாக இங்கே வந்திருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

ஆரம்பத்தில் இதை நம்பாத விஷ்வத் போக போக அவரது பேச்சுக்களில் நம்பிக்கை கொண்டு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அவரது தாயை பார்க்க அழைத்துச் செல்கிறார். அங்கே அப்துல் கலாமின் நண்பனாக சாஸ்திரி இப்போது வயதான தோற்றத்தில் இருக்கிறார். எதற்காக அப்துல் கலாம் டைம் ட்ராவல் பண்ணி இப்போது வந்துள்ளார், அவர் வந்த நோக்கம் நிறைவேறியதா, இதற்கு விஷ்வத் எப்படி உதவியாக இருந்தார் என்பதை மீதி கதை சொல்கிறது.

நினைத்ததை சாதிக்க முடியாத இந்த சமூகத்தின் மேல் குமுறல் கொண்ட இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் நாயகன் விஷ்வத். அவரது தோழியாக டிராபிக் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா அவ்வப்போது அவருக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ஒரு பாந்தமான கேரக்டரில் நடித்துள்ளார்.

சிறு வயது அப்துல் கலாமாக நடித்துள்ள நாக விஷால் என்கிற சிறுவனும் அந்த கதாபாத்திரத்துடன் அழகாக ஒன்றி பயணித்திருக்கிறார். அது மட்டுமல்ல அவரது நண்பராக நடித்துள்ள நடிகர் காத்தாடி ராமமூர்த்தியும் தனது அனுபவப்பட்ட நடிப்பை இதில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுவன் அப்துல் கலாமும் அவரது நண்பராக இப்போது பெரியவராக இருக்கும் சாஸ்திரி காத்தாடி ராமமூர்த்தியும் வாடா போடா நண்பர்கள் போல பேசிக் கொள்வது சுவாரசியம் கூட்டுகிறது.

இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் ஆகியோரது பணி கதைக்களத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.

டைம் ட்ராவல் பற்றிய கதைகள் எப்போதாவது தான் வெளி வருகின்றன. இது போன்ற கதைகளில் அழகான கற்பனைகளை மட்டும் சரியாக கொடுத்து விட்டால் படம் அனைவருக்கும் பிடித்து விடும் அப்படி மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்து வந்தால் எப்படி இருக்கும் என்கிற ஒரு புதிய கோணத்தில் தனது கற்பனையை டைம் டிராவலர் மூலமாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்த சங்கர்.