சாலா ; விமர்சனம்


மதுக்கூடம் நடத்தும் நாயகன் தீரனுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மா வெங்கடேஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, அதுவே ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது.

இதற்கிடையே கெளரவமாக கருதப்படும் மதுக்கூடம் ஒன்றை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

அந்த மோதலின் விளைவுகளையும், மதுப்பழக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளையும் பாடம் எடுப்பது போல் மட்டும் இன்றி கமர்ஷியல் பட ரசிகர்கள் கொண்டாடும்படியும் சொல்வது தான் ‘சாலா’.

கதைக்கேற்ற ஹீரோவாக ஜொலித்திருக்கிறார் தீரன். இந்த கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு கொடுத்து அசத்தியிருக்கும் தீரன் சண்டைக்காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார்.

வாங்கும் சம்பளத்தை அப்படியே ஏழை மாணவர்களுக்கு படிப்புக்காக செலவிட்டு வாழும் சமூக சேவகி ஆசிரியை கதாபாத்திரத்தில் நாயகி ரேஷ்மா பொருத்தமான தேர்வு.

வில்லத்தனத்தில் மிரள வைத்து மிரட்டும் தங்கதுரையாக சார்லஸ் வினோத், சாலாவின் நண்பன் தாஸ்சாக நகைச்சுவை பேச்சில் கவனிக்க வைக்கும் ஸ்ரீநாத், முரட்டுத்தனம் மற்றும் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குணாவாக அருள்தாஸ் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டனர்.

தீசன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருப்பதோடு, பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் பணி கச்சிதம்.

மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படி அடிமையாகி கிடக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால், இறுதிக்காட்சியில் அதிர்ச்சி தந்து அதிர வைக்கிறார். மதுவிற்கு எதிரான ஒரு படம் என கூறினாலும் படத்தில் மதுவின் வாடையை சற்று குறைத்திருக்கலாம்.