எண்பதுகளின் இறுதியில் ‘மக்கள் நாயகன்’ என்கிற பட்டத்துடன் வெள்ளி விழா படங்களை கொடுத்த ராமராஜன் கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு இந்த சாமானியன் படத்திலும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜாவும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணி ரசிகர்களுக்கு என்ன விதமாக விருந்து படைத்துள்ளனர் ? பார்க்கலாம்.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி, ஓய்வு பெற்று தன்னுடைய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராமராஜன் கிராமத்திலிருந்து தன் நண்பர் எம்.எஸ். பாஸ்கராய் அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள இஸ்லாமிய நண்பர் ராதாரவி வீட்டுக்கு வருகிறார். வந்தவர்வெடிகுண்டுடன் சென்று ஒரு தனியார் வங்கியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் எம்.எஸ்.பாஸ்கர், அந்த வங்கியின் மேனேஜர் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்று அவர் குடும்பத்தை சிறைபிடிக்க, அதேபோல ராதாரவி இந்தப்பக்கம் உதவி மேனேஜர் வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்தினரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.
ராமராஜன் எதற்காக இதை செய்கிறார்? அதன் பிறகு என்ன நடந்தது? சாமானியனாக போலீசையும் வங்கி அதிகாரிகளையும் ஆட்டுவிக்கும் ராமராஜனின் கோரிக்கை என்ன? என்பது மீதிக்கதை.
.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் ராமராஜன்.உடலில் அது தெரியவில்லையெனினும் நடிப்பிலும் வசன உச்சரிப்புகளிலும் மிடுக்கைக் கொண்டுவர முயன்றிருக்கிறார். கதாநாயகி, காதல், பாடல் என்று கமர்ஷியல் நாயகனாக அல்லாமல், தற்போதைய வயதுக்கு ஏற்ற கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். வசனங்களில் கைதட்டலை அள்ளுகிறார்.
ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ராதாரவி இருவரும் ராமராஜனுக்கு பக்கபலமாக இருப்பதோடு, தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கும் பலமாக பயணித்திருக்கிறார்கள். லியோ சிவக்குமார் நக்க்ஷா சரண் இளம் ஜோடிகளின் காதலும், குறும்பும் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு ஆறுதல்.
வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் அபர்ணதி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ராமராஜன், இளையராஜா கூட்டணி கோலோச்சிய காலம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இந்தப்படத்தில் அந்த அளவுக்கு சிறப்பு சேர்க்க முடியவில்லை என்றாலும் மீண்டும் அவர்களது பழைய பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
வங்கி கடன் மூலம் அவதிப்படும் மக்களின் நிலையை மட்டும் இன்றி, கடன் என்ற பெயரில் பொதுமக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் வங்கிகளின் திருட்டுத்தனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக சாதனையாளர்களின் வீரத்தை விட, சாமானியனின் கோபம் பெரிது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் ராகேஷ்