கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விரும்பாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தேர்டுத்து நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். அந்தவகையில் கதாநாயகியை மையப்படுத்தி அவர் நடித்துள்ள சபரி படம் வெளியாகி இருக்கிறது. எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது மகள் தான் உலம் என்று வாழ்கிறார் வரலட்சுமி சரத்குமார். பின்னர் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சிக்கிறார். இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதோடு, சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு வரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்கிறார்.
குழந்தையை சொந்தம் கொண்டாடும் மைம் கோபி, அதே குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்பது ஏன்?, தனது மகளை மீட்க போராடும் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘சபரி’-யின் கதை.
ஒரு குழந்தையின் தாய் என்கிற பக்குவப்பட்ட கதாபாத்திரத்திற்கு பக்குவமான நடிப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக குழந்தைக்காக பரிதவிப்பது உள்ளிட்ட எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
அவரது கணவராக வரும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு குழந்தை வேண்டுமான பிரச்சனை செய்வது மட்டும்தான் வேலை என்பதால் பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆரம்பத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் அறிமுகமாகும் மைக் கோபியின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பு மிக்கதாக பயணிக்கிறது
ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகு.
முதல் பாதியில் சில நம்பிக்கையூட்டும் தருணங்களுடன் படம் துவங்குகிறது. நாயகியின் பாசப் போராட்டத்தை, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் அனில் கட்ஸ், ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாலும் பிற்பாதியில் வேகம் வெளியேறி, பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதை பிரதிபலிக்கும் வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்தை உருவாக்கி , பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதமாக இப்படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை தாரளமாக பாராட்டலாம்.