இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் சர்தார்.
ஒரே நாடு ஒரே குழாய், மூலம் இந்தியாவில் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த முயற்சி நடக்கிறது. இதனால், தண்ணீர் முழுக்க தனியார்மயமானால் என்னென்ன விளைவுகள் வரும் என்னும் விஷயத்தை கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் பி.எஸ்.மித்ரன்.
காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரியும் விஜய பிரகாஷ் ஒரு பப்ளிசிட்டி விரும்பி. காவல்துறை குறித்த ஒரு விஷயம் ட்விட்டரில் டிரெண்டானால் அதற்கு அவரே காரணமாக இருப்பார். அப்படி ஒரு விளம்பரத்துக்காக தன் பார்வைக்கு வரும் ஒரு தேசத்துரோக வழக்கைக் கையில் எடுக்கிறார்.
அதில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு பெண் மூலம், தண்ணீர் மாஃபியா, நாட்டின் நலனுக்காக உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஓர் உளவாளி, பக்கத்து நாடுகள் செய்யும் சதித்திட்டம் எனப் பல அரசியல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
அந்த உளவாளி யார், அவருக்கும் விஜய பிரகாஷுக்கும் என்ன சம்பந்தம், தண்ணீர் மாஃபியாவில் சம்பந்தப்பட்டிருக்கும் வில்லனுக்கும், அந்த உளவாளிக்கும் என்ன சம்பந்தம் எனப் பல கிளைக்கதைகளை ஒன்றிணைத்து விடைகளைச் சொல்கிறது மீதிக்கதை.
இந்திய உளவாளி ஏஜென்ட் சர்தார், காவல்துறை அதிகாரி விஜய்பிரகாஷ் என இருவேடங்களில் அசத்தியிருக்கிறார் கார்த்தி. சர்தார் என்ற பெயரில் அந்த முதிர்ச்சிக்குரிய நடுக்கம், உடல்மொழி, அதே சமயம் பயிற்சிகள் பெற்ற ஓர் உளவாளிக்கான சாகச சண்டைக் காட்சிகள் என பிரமாதமாக நடித்துள்ளார். வில்லனாக வரும் சங்கி பாண்டே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன். இருவருக்கும் நல்ல வேடம், இருந்தாலும் ரஜிஷாவின் கதாப்பாத்திரம் நம் மனதில் நிற்கிறது. சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கு லைலாவின் ரோல் தான் படத்தில் முக்கியமானது, அவரும் அதை திறம்பட செய்திருக்கிறார்.
லைலாவின் மகனாக வரும் சிறுவன் ரித்விக் பிரமாதமாக நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் இசையும், ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
உளவாளிகளின் சோதனையான வாழ்க்கை, தண்ணீர் பிரச்சனை என்னும் இரண்டு விஷயங்களை கொண்டு சர்தார் படத்தை கொடுத்துள்ளார் பி.எஸ்.மித்ரன்.
மொத்தத்தில் சர்தார் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.