சந்தானம், சூரி, யோகிபாபு வரிசையில் நகைச்சுவை நடிகர் சதீஷும் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ள படம் இது.. முந்தையவர்களுக்கு கிடைத்த வெற்றி சதீஷுக்கும் கிடைத்ததா ? பார்க்கலாம்
ஒரு மலைப்பாதையில் இரவில் பதட்டத்துடன் காரை ஒட்டி வருகிறார் சதீஷ். எதிர்பாராமல் எதிரே பைக்கில் ஒருவர் வந்து மோதி அவர் இறந்து போக அந்த சடலத்தை மறைக்க, அதைத் தனது காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார். ஆனால் இடையில் போலீஸ் அவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக கைது செய்கிறது. அதன் பிறகு காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இன்னொரு பக்கம் அதே இரவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலையாளியை கைது செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஈகோ யுத்தம் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியை ஒரே நோர்கோட்டில் இணைக்கும் திருப்பங்களை விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் ஜானரில் சொல்வதே ‘சட்டம் என் கையில்.
முழுமையான கதாநாயகன் ஆக வேண்டுமென்றால் முந்தைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டவர் போல படத்தில் எங்கேயும் நகைச்சுவை நடிகர் சதீஷை பார்க்கவே முடியவில்லை. செய்த தவறை மறைக்க பதட்டத்துடன் காணப்படுவதும், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும் அப்பாவித்தனமாகவும், காவலர்களிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதும், அடி வாங்குவதும் என்று பரிதாபம் ஏற்படும் விதமாக நடிப்பில் புதிய சதீஷை பார்க்க முடிகிறது.
சப் இன்ஸ்பெக்டராக வரும் அஜய் ராஜ் மற்றும் எஸ்எஸ்ஆக வரும் பாவல் நவநீதன் இடையேயான ஈகோ மோதல் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வெண்பா, வித்யா பிரதீப், பவா செல்லதுரை, இ.ராமதாஸ், அஜய் தேசாய் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தில் குறைவின்றி நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு இரவில் நடக்கும் கதையின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், அதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் பணி சபாஷ் பெறுகிறது..
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லரை, சிறப்பாக நேர்க்கோட்டில் கொண்டுபோய் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் சாச்சி. போகிற போக்கில் காவல் நிலைய பாலிடிக்ஸ்களை, வெளிச்சம்போட்டு காட்டி இருப்பதும் அருமை. அந்தவகையில் இயக்குநர் சாச்சியின் சாமர்த்தியமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதை படத்தில் இருக்கும் சில தடுமாற்றங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைத்து விடுகிறது.