சைரன் ; விமர்சனம்


செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலிலேயே இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயம் ரவி, பரோலில் தன் 12 வயது மகளைப் பார்க்க வெளியே வருகிறார். அவர் வெளியே வந்த நேரத்தில் யார் யார் மூலம், குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு சென்றாரோ அவர்கள் எல்லாம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சந்தேக பார்வை ஜெயம் ரவி மீது திரும்புகிறது. எப்பொழுதும் ஷாடோ போலீஸுடன் இருக்கும் ஜெயம் ரவி இந்த கொலைகளை செய்தாரா, இல்லையா? ஜெயம் ரவி ஜெயிலுக்குப் போகும் காரணம் என்ன? குற்றம் செய்தவர்களை யார் கொலை செய்தது? என்பதே சைரன் படத்தின் மீதிக் கதை.

படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் ஜெயம் ரவி வயதான கதாபாத்திரத்தில் தான் வருகிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் அனுபமா பரமேஸ்வரர் உடன் ரொமான்ஸ் காட்சிகளை இளமையாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்கவேண்டுமோ அதற்கு ஏற்றது போல எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் மகள் மற்றும் தந்தை இடையே பாசப்பிணைப்பு படத்திற்கு கூடுதல் பிளஸாக அமைந்திருக்கிறது.

அழுத்தமான நடிப்பை கொடுத்து கவர்கிறார். கீர்த்தி சுரேஷ் இன்ஸ்பெக்டராக ஆரம்பத்தில் ஒருமாதிரி தெரிந்தாலும் போகப் போக ஒன்றிவிடுகிறார். விசாரணை செய்யும் போதும் உயர் அதிகாரியிடம் அசிங்கப்படும்போதும் அவர் தரும் சின்ன சின்ன ரியாக்ஷன்கள் நன்று.

ஜெயம்ரவியின் காதல் மனைவியாக வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கு வித்தியாசமான வேடம். அதனால் குறைவான நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.

கான்ஸ்டபிளாக வரும் யோகி பாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார். இறுக்கமாகப் போகும் படத்தை இலகுவாக்க யோகிபாபு பயன்பட்டிருக்கிறார். அழகம் பெருமாள், அஜய், சமுத்திரக்கனி ஆகியோர் டெம்ப்ளேட் வில்லன்கள்தான் என்றாலும் திரைக்கதை அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

பெரும்பாலும் இரவிலேயே நடக்கும் காட்சிகள் என்றாலும் அவற்றில் தெளிவும் நேர்த்தியும் இருக்கின்றன.அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்டமாதிரி இருந்தாலும் சுவையாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் பலமூட்டியிருக்கிறார்.

படம் தொடங்கிய உடனே நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், அடுத்தடுத்த காட்சிகளை திருப்பங்களோடு நகர்த்தி சென்று, இது வழக்கமான கதை என்பதையும் மறந்து படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைப்பதோடு, “ஒரு நல்லவனை நல்லவனாக நடிக்க வச்சிட்டீங்களே”, “சாதி இல்லனு சொல்றவன என்ன சாதி என்று தேடாதீங்க” போன்ற வசனங்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார்.

கதை எதுவாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை விவரிக்கும் முறை தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், ஜெயம் ரவி ரசிகர்களை மட்டும் இன்றி, குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பதற்கான அம்சங்களை அளவாக கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.