சூது கவ்வும் 2 ; விமர்சனம்


விஜய்சேதுபதியின் திரையுலக பயணத்தில் வெற்றி படங்களின் வரிசையில் முக்கியமான படம் ‘சூது கவ்வும்’. தற்போது இதன் இரண்டாம் பாகமாக மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சூது கவ்வும் 2’ முதல் பாகத்தை போல் பிரமிக்க வைத்துள்ளதா பார்க்கலாம்.

ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தமிழக நிதி அமைச்சரான கருணாகரன். ஆனால் கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதால் அவர் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார். அதன்படி, வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை பெண்ணுடன், கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா, அமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்தி விடுகிறார். அதனால் அரசியலில் மட்டும் இன்றி கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் என்ன? என்பதை முதல் பாகத்தின் பாணியிலேயே சொல்வது தான் ‘சூது கவ்வும்.

முதல் பாகத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி என்ன செய்தாரோ அதையே தான் இதில் மிர்ச்சி சிவா குருநாத் என்ற கதாபாத்திரம் மூலம் செய்திருக்கிறார். தனது வழக்கமான டைமிங் காமெடியில், ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். அதேசமயம் திரைக்கதையில் கருணாகரனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவரும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி முதல் பாகத்தைப் போலவே, இப்படத்திலும் கலக்கியுள்ளார்

அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை காட்டிய விதம் என முழு படத்தையும் முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

தற்போதைய சூழலில் நகைச்சுவை என்பது உரையாடல்கள் மூலமாக மட்டும் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதில்லை. காட்சிகளாலும்.. காட்சி அமைப்புகளாலும்… நட்சத்திரங்களின் உடல் மொழிகளாலும் … என பல எதிர்பார்ப்பினை கொண்டிருக்கிறார்கள். அதனை இந்த படம் நிறைவேற்ற வில்லை. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய பாகத்தின் தொடர்ச்சி என்ற முறையில் இன்னும் கூடுதலான சுவாரஸ்யமாக அமைத்திருக்க வேண்டும் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன்.