புஷ்கர் – காயத்ரி எழுத்து உருவாக்கத்தில் பிரம்மா – சர்ஜூன் இயக்கத்தில் அமேசாம் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சுழல் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் வெளியாகி உள்ளது.
முதல் பாகத்தில் தங்கையை கொன்ற சித்தப்பாவை பழி தீர்த்ததற்காக சிறையில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் தற்காப்புக்காக இந்த கொலையை செய்ததாக வழக்கறிஞர் லால் வாதாடுகிறார். இந்த சூழலில் திடீரென அவர் இறந்து போகிறார். அவரை கொன்றது நாங்கள் தான் என எட்டு பெண்கள் போலீசில் சரணடைகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கிறார் கதிர்.
இந்த நிலையில், மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 8 இளம் பெண்கள் சரணடைவதோடு, அவர்கள் அனைவரும் கொலை குறித்து ஒரே மாதிரியான விசயத்தை சொல்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் எந்தவித தொடர்பும் இல்லாததும், அவர்களின் பின்னணி குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்காததும், போலீஸுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது.
இவர்கள் எட்டு பேரும் யார்? இவர்கள் ஏன் ஒரே மாதிரி லாலை கொன்றதாக ஒப்புக் கொள்கிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? யார் உண்மையான குற்றவாளி? என்பதே எட்டு வலை தொடர்களின் விடைக்கான விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
வழக்கறிஞர் லால் கொலை வழக்கில் கைதான எட்டு பெண்களையும் சிறையில் ரகசியமாய் கண்காணிக்கும் பொறுப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ். கிளைமாக்சில் சிறைக்குள் எதிரிகளின் கொலை வெறி தாக்குதலில் இருந்து எட்டு பெண்களையும் காப்பாற்ற போராடும் தருணத்தில் நடிக்கும் துடிப்புமாய் பதற்றமுமான ஐஸ்வர்யாவை அந்த நடிப்பு சிகரம் ஏற்றி பார்க்கிறது.
வழக்கறிஞரின் மர்மக்கொலை வழக்கை விசாரணை செய்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க முயலும் நாயகன் சக்கரவர்த்தியாக கதிர் வருகிறார். சீரியஸான முகத்துடன், எடுத்துக்கொண்ட பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ’புலனாய்வாளர்’ கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
வக்கீல், சமூக ஆர்வலர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் சிறந்த மனிதராக லால். தொடர் முழுவதும் இவரின் கொலையை மையப்படுத்தி வரும் காட்சிகளில் தனித்து நின்று பெருமை சேர்க்கிறார்.
நாயகனோடு இணைந்து புலனாய்வு செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தியாக சரவணன் நடித்திருக்கிறார். எந்த சலனமும் காட்டிக் கொள்ளாமல் சரவணன் இதில் நடித்திருப்பது அந்த பாத்திரத்தின் தன்மையை புரிய வைக்கிறது.
திருவிழாவின் போது நடக்கும் கதை என்பதால், தொடரின் பெரும்பாலான காட்சிகள் மக்கள் கூட்டம் நிறைந்தவையாகவே இருக்கிறது. உண்மையான திருவிழாவா? அல்லது படப்பிடிப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வா?, என்பதை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். சாம் சி.எஸ்.சின் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு நம்மை பிணைத்து விடுகிறது.
பெண் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தையும், அதற்கான ரகசிய நெட்வொர்க்கையும் அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு நோக்கம் கொண்ட இந்த ‘சுழல் 2’ இணையத் தொடருக்கு இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அற்புதமாக திரைக்கதை எழுத, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்கள்.