நாயகன் ரியோ. அவரின் பால்ய பருவத்திலேயே, அவருடைய அம்மா, அப்பா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகின்றனர். அதனைத் தொடர்ந்து சில வருடங்களில், அப்பாவை இழக்கிறார். இந்த சம்பவங்கள், அந்த சிறிய வயதிலேயே ஆறாத வடுக்களாக மாறுகிறது. ஆண் – பெண் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து வாழமுடியாது. என்ற முடிவுக்கு வருகிறார்.
ஆனால், அவரது காதலி கோபி ரமேஷ் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். பிரிவுக்குப் பிறகு கோபி ரமேஷ் கர்ப்பமடைந்திருப்பதை தெரிந்து கொள்ளும் ரியோ ராஜ், கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார்
ஆனால், கருவை கலைக்க கோபிகாவிற்கு விருப்பமில்லை. கோபிகாவின் காதல் வீட்டிற்கு தெரிந்த காரணத்தால், அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல். இறுதியில், ஒரு கருவின் மகத்துவத்தை ரியோ புரிந்து கொண்டாரா இல்லையா.? ரியோ-கோபிகா ஜோடி சேர்ந்ததா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
ரியோராஜ் காதல்காட்சிகளில் இளமைத்துள்ளலுடனும் மோதல் காட்சிகளில் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.குழந்தைகள் குறித்த அவருடைய எண்ணம் முற்றாக மாறக்கூடிய முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பின் ஆழத்தை உணரலாம்
மனு கதாபாத்திரத்தில் நடித்த கோபிகா ரமேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நடிக்க ஏராளமான காட்சிகள். அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்
ரெடின்கிங்ஸ்லிக்கு முக்கியமான வேடம்.சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அந்த வேடத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். ரியோவின் அக்காவாக, டாக்டர் ‘கீதா’ கதாபாத்திரத்தில் நடித்த, ரேஷ்மி கார்த்திகேயன் வெகு சிறப்பாக, இயல்பாக நடித்திருக்கிறார். அருணாச்சலேஸ்வரன், பௌசி, ரெஞ்சி பணிக்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் கச்சிதம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சில பாடல்கள் மனதை வருடுவது போல் இருந்தாலும், சில பாடல்கள் ஏனோ தானோ என்று பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் சுமார் தான். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதையில் இருக்கும் இளமை காட்சிகளிலும் தெரிகிறது.
மனித வாழ்க்கையில் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்று புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார். அந்தவகையில் உயிரின் மகத்துவத்தையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட்.