டீன்ஸ் ; விமர்சனம்


ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் ஒன்றுக்கூடி பெரியவர்கள் போல் அனைத்து விசயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் இருப்பதாக சொல்கிறார். அந்த பேயை நேரில் சென்று பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

ஊரை நோக்கி செல்ல நடுவழியில் கலவரம் என்பதால் பஸ் போக முடியாமல் இருக்க சரி என்று நடந்து போகலாம் என்று முடிவு எடுத்து அனைவரும் வெட்ட வெளியில் செல்லும்போது ஒவ்வொருவராக நான்கு பேர் காணாமல் போகின்றனர். அவர்களைத் தேடி மற்றவர்கள் அலையும்போது இயக்குனர் பார்த்திபன் ஒரு அதிசயத்தை கண்டுவர அவரிடம் உதவி கேட்கின்றனர் மாணவர்கள். அவர்களுக்கு உதவி செய்யும் பார்த்திபன் ஓர் அதிர்ச்சியான விஷயத்தை கூற மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். பின்னர் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

படத்தில் நடித்துள்ள சிறுவர் சிறுமியர் அனைவரும் இயக்குனரின் எண்ண ஓட்டங்களை கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பங்களாக நன்கு நடித்துள்ளார்கள். இன்றைய கால கட்டத்தில் வாழும் சிறுவர்களை அவர்கள் பிரதிபலிப்பதால் ,அவர்களின் வயதுக்கு மீறிய பேச்சுகளும் ,செயல்களும் பெரிதாக குறை சொல்லமுடியவில்லை .புதுமை இயக்குனர் பார்த்திபனின் நடிப்பும் கதாபாத்திரத்துக்கு ஏற்றவண்ணம் நன்றாக உள்ளது . தன் வழக்கமான பாணியில் யோகிபாபும் டீன்ஸில் நடித்துள்ளார்..

பத்துக்கும் மேற்பட்ட கதையின் நாயகர்களான வளரிளம் பருவத்தை சேர்ந்த நடிகர்களை… பாடல் ஒன்றின் மூலம் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தும் பாணி- பார்த்திபனின் டச். ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்களில் நாடகத் தனமும், மிகைத்தனமும் அப்பட்டமாக தெரிகிறது. தங்களுடன் வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக மாயமாக மறைவதும்.. அது ஏன்? எப்படி? என்று புரியாமல் மற்றவர்கள் தவிப்பதும், தாங்களாவது உயிருடன் பயணத்தை தொடர்வோமா? தொடர மாட்டோமா? என்ற குழப்பம் அவர்களிடத்தில் ஏற்படுவதும் சுவராசியமானது. ஆனால் குறைவான கற்பனை திறன் மற்றும் காட்சி மொழியின் காரணமாக ரசிகர்களின் மனதில் இவை எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் முதல் பாதியின் நிறைவு காட்சியில் பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்துகிறார் இயக்குநர்.

பேயைப் பார்க்கப் போய்ச் சிக்கலில் மாட்டும் சிறுவர்கள், பேயைப் பார்த்தார்களா? அல்லது யாரைப் பார்த்தார்கள் என்பதில் ஓர் ஆச்சரியம் வைத்திருக்கிறார் பார்த்திபன். மேலும் படத்தை நகர்த்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பார்த்திபன் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.

இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் கதைக்களத்திற்கு ஏற்ப வித்தியாசமான பீஜிஎம்களால் கவனம் ஈர்க்கிறார். ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி குறைந்த பட்ஜெட்டையும் தாண்டி காட்சியில் பிரமாண்டத்தை புகுத்த முயற்சித்திருக்கிறார். எளிமையான மற்றும் குறிப்பிட்ட ஒரே லொக்கேஷனில் காட்சிகள் நகர்ந்தாலும், தனது கேமரா யுக்தி மற்றும் கோணத்தின் மூலம் சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

சிறுவர்களை மட்டுமே வைத்து ஒரு படம் எடுத்திருப்பதும் அதில் பேசியிருக்கும் விசயங்களும் பேய் பிசாசுகளுக்குப் பதிலாக ஒரு புதுமையை வைத்திருப்பதும் வரவேற்புக்குரியவை. டீன் ஏஜ் சிறார்களுடன் கூடிய கதைகளத்தில் பார்த்திபனின் இந்த திரைப்பயணத்தை அவரது புதிய முயற்சிக்காக பாராட்டலாம். பள்ளி விடுமுறை காலத்தில் வெளிவந்திருந்தால் இன்னுமும் வரவேற்பு பெற்று இருக்கும்.