தலைமைச் செயலகம் (வெப்சீரிஸ்) ; விமர்சனம்


அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள வெப் தொடர் இது.. இரண்டு கதைகள் ஒரே நேர் கோட்டில் பயணிப்பது தான் இந்த சீரிஸின் மையக்கரு. அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் திருட்டு பட்டம் கட்டப்படும் பெண் ஒருவரை கிராமத்தினர் கொடூரமாக தாக்குகின்றனர். அதன் இறுதியில் அப்பெண் ஆவேசமாக அனைவரையும் வெட்டி சாய்க்கிறார். அதைத்தொடர்ந்து காணாமல் போகும் அவரை காவல்துறை பதினைந்து வருடங்களாக தேடி வருகிறது.

இன்னொரு பக்கம் தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அவ்வழக்கில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சிகளில் அவரது கட்சி நிர்வாகிகளும், குடும்பத்தினரும் ஈடுபடுகிறார்கள். மறுபக்கம் தீர்ப்பு எதிராக வந்தால், அடுத்த முதல்வர் யார்? என்ற பேச்சும் கட்சியில் நிலவுகிறது.

ஒரு பக்கம், ஊழல் வழக்கில் சிக்கிய தமிழக முதல்வர், மறுபக்கம் தேடப்படும் பெண் கொலை குற்றவாளி, இந்த இரண்டு கதைகளை வைத்துக்கொண்டு, தமிழக அரசியல் சம்பவங்களையும், நக்சல் அரசியலையும் சேர்த்து சொல்வது தான் ‘தலைமைச் செயலகம்.

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் கிஷோர். தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்து, அதை அளவோடு செய்து முடித்திருக்கிறார். தனக்குப் பின்னால் கட்சியின் நிலைமை, தமிழக ஆட்சியின் நிலைமை என வருந்தி நிற்கும் தருணத்தில் நடிப்பின் உச்சம் தொடுகிறார் நடிகர் கிஷோர்.

கொற்றவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு, வாழ்நாள் முழுதும் பெருமை கொள்ளத்தக்க வேடம்.அதற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவரும் நற்பெயர் பெற்று தொடருக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

முதல்வரின் மகளாக, தன் அப்பாவின் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளை 100 சதவீத முழு மனதுடன் செய்யும் அதே வேளையில், ஒரு வேளை அவர் சிறைக்கு செல்லும் சூழல் வந்தால், அடுத்த முதல்வராக தான் வந்துவிட வேண்டும் என்கின்ற வேட்கையுடன் இருக்கும் அரசியல்வாதியாக ரம்யா நம்பீசன் ஆச்சரியப்படுத்துகிறார்.

சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனன், தமிழக காவல்துறை அதிகாரியாக வரும் பரத், அவரது காதலியாக வரும் தர்ஷா குப்தா, மற்றும் கனி குஸ்ருதி, சாரா பிளாக் , சித்தார்த் விபின், ஒய்.ஜி.மகேந்திரா, சந்தான பாரதி, கவிதா பாரதி, நமோ நாராயணா உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஒயிட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இதுவரை நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை மிகவும் நேர்த்தியாக படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். அரசியல் பற்றிய புரிதல் இல்லாத பார்வையாளர்களுக்கும் அது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் தொடர் அமைந்திருப்பது ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறது.