கட்டிடக்கலை நிபுணரான பாவனா, வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக பழமையான சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார். இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.
இது கனவு தான் என்று நினைத்துக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்கிறார். ஆனால், அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து பாவனா அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள்.. பாவனாவை அச்சுறுத்தும் அந்த அமானுஷ்யம் யார்.?? எதற்காக பாவனாவை குறி வைக்க வேண்டும்.??
மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி ஆக கொடுத்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். பாவனாவின் பயணத்தில் திகில் குறைவாக இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக வேகமாக நகர்த்தி செல்கின்றன.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு சினிமா வழங்கப்படியே சஸ்பென்ஷன் கொடுக்கப்படுகிறது. சஸ்பென்ஷன் வழங்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள்தான் விஷயங்களை சரியாக துப்பறிவார்கள் என்கிற சினிமா இலக்கணப்படியே அவரும் தன் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.
ஜெயபிரகாஷ், பாவனாவின் தோழியாக வரும் சிந்துரி ஆகியோரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். அமானுஷ்ய சக்திகளை ஆராய்ச்சி செய்பவராக வரும் ரமேஷ் ஆறுமுகம் ஆவிகள் குறித்து “அளந்து” விடுவதெல்லாம் நம்பும்படி இல்லை
ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவை அழகாக காட்டியிருப்பதோடு, கொடைக்கானல் காட்சிகளை கவனம் ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்திருக்கிறது.
ஆரம்பத்தில் திகில் படமாக தொடங்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கிரைம் திரில்லராக பயணிக்கும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் ஜெய்தேவ். ப்ளாஷ் பேக் காட்சி கண்ணீர் வரவழைக்கிறது. இரண்டாம் பாதியில் தேடுதலை சற்று குறைத்து த்ரில்லரை அதிகப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் படத்தை இயக்கியிருக்கிறார்