தனது கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடனமாட விளம்பர படங்களை எடுத்து அதன் மூலம் மக்களிடம் பிரபலமான சரவணன், கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் தி லெஜண்ட்.
நிரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க போராடும் நாயகனின் கதைதான் படத்தின் ஒன்லைன். புகழ் பெற்ற விஞ்ஞானி சரவணன் தனக்கு வரும் பல உயரிய பதவிகளை புறந்தள்ளிவிட்டு, தன் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என எண்ணி சொந்த ஊர் திரும்புகிறார்.
அங்கு நிகழும் அவருக்கு நெருக்கமான ஒருவரின் இழப்பு, சரவணனை நீரிழிவு நோய்க்கான நிரந்தர மருந்தை கண்டுபிடிக்க முயல்கிறார். இதற்கு பெரிய மருந்து கம்பெனி ஓனரான சுமன் எதிராக இருக்கிறார்.
சரவணன் மருந்தை கண்டுபிடித்தாரா? அவருக்கு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக் கதை.
உல்லாசம், விசில் போன்ற படங்களையும், பல விளம்பர படங்களையும் இயக்கிய ஜேடி-ஜெர்ரி இந்த படத்தை இயக்கியுள்ளனர்.
படம் முழுவதும் சரவணனை சுற்றியே நடக்கிறது. முதல் படம் என்பதால் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பை மெருகேற்றி கொள்வார் என எதிர்பாக்கலாம்.
சரவணனின் மனைவியாக முதல் பாதியில் கீத்திகாவும், ஆராய்ச்சி உதவியாளராக ஊர்வசி ரவுடல்லா இரண்டாவது பாதியிலும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பிரபு, மறைந்த நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், சுமன் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்திற்கு பலம் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜின் இசை தான்.
இனி அடுத்து சரவணன் தொடர்ந்து நடிப்பாரேயானால், தான் விரும்பும் கதைகளை விட ரசிகர்கள் விரும்பும் கதைகளை தேர்வு செய்து நடித்தால் திரைப்பயணம் அவருக்கு சிறப்பானதாக அமையும்.