தூக்குதுரை ; விமர்சனம்


விலை மதிப்பில்லாத கிரீடம் ஒன்றை ராஜ குடும்பத்தைச் சேர்ந்த தற்போதையை தலைமுறையான மாரிமுத்து பாதுகாத்து வருகிறார். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் கோவில் திருவிழாவில் மட்டும் அந்த கிரீடம் மக்களிடம் காண்பிக்கப்படும். மாரிமுத்து. இவரது மகள் தான் இனியா. இனியாவிற்கும் யோகிபாபுவிற்கும் காதல். காதலை மாரிமுத்து ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதற்காக, இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிடுகிறார்கள். இந்த சமயத்தில், கிராமத்தினர் அவர்களை பிடித்து விடுகிறார். யோகிபாபுவை கொன்று கிணற்றுக்குள் வீசி விடுகிறது மாரிமுத்து கும்பல்

மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணனுக்கு அண்ணன் மேல் பயங்கர பொறாமை. கிரீடம் காணாமல் போனால் திருவிழா தடைபடும்; அதன்பின் அண்ணனுக்கு முதல் மரியாதை கிடைக்காது என நினைக்கும் அவர், மாரிமுத்து வைத்திருக்கும் கிரீடத்தைத் திருட தனது அடியாட்களை ஏவி விடுகிறார். இந்த நிலையில், மாரிமுத்துவிடம் இருக்கும் கிரீடம் போலியானது என்றும், ஒரிஜினல் கிரீடம் அந்த ஊரில் உள்ள பழைய கிணற்றில் இருப்பதும், தெரிய வருகிறது.

அந்த உண்மை தெரிந்த பிறகும், ராஜ குடும்பம் மற்றும் அந்த ஊர் மக்கள் கிணற்றில் இறங்கி கிரீடத்தை எடுக்க பயப்படுகிறார்கள். அந்த கிரீடம் எப்படி கிணற்றுக்குள் போனது?, கிணற்றின் மீதான ஊர் மக்களின் பயத்துக்கு என்ன காரணம்?, கிணற்றில் இருக்கும் கிரீடம் எடுக்கப்பட்டதா? இல்லையா?, என்பது தான் ‘தூக்குதுரை’ படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபுக்கு அதிகம் வேலை இல்லை. மிகவும் குறைந்த அளவு காட்சிகளே கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கொடுத்த வேலையை ஓரளவிற்கு செய்து இருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் யோகி பாபுவை மைய கதாபாத்திரமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நாயகியாக வரும் இனியா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடிப்பு திறனை கொடுத்து இருக்கிறார்.

புதுமுகம் மகேஷ் கதாபாத்திரத்துக்கேற்ற தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நான்கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர் சிரிக்க வைப்பதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்கள். மறைந்த நடிகர் மாரிமுத்து,நமோ நாராயணன் ஆகியோர் வேடங்களும் அவர்களுக்குள் நடக்கும் போட்டியும்தாம் படத்தை நகர்த்த உதவுகிறது.

ரவி வர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும், தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹாரர் காமெடி ஜானரில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்