போலீஸ் அதிகாரி (அஜய்) உதவியுடன் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் சட்ட விரோதமாக வைத்திருக்கும் ரூ.500 கோடியை கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது, ஒரு கும்பல். அதன்படி வங்கிக்குச் செல்லும் கும்பல், வாடிக்கையாளர்களை மடக்கி வைத்திருக்கிறது. அந்தக் கும்பலை துப்பாக்கிமுனையில், தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் சர்வதேச கேங்ஸ்டர், டார்க் டெவில் (அஜித்).
அவரைப் பிடிக்க கமிஷனர் (சமுத்திரக்கனி) தலைமையில் போலீஸ் டீம் களமிறங்குகிறது. என்ன வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அது பலனளித்ததா? கேங்ஸ்டர் டார்க் டெவில் யார்? உண்மையிலேயே வங்கியில் கொள்ளையடிக்க நினைத்தது யார்? என்பதை ஆக்ஷனுடனும் அருமையான மெசேஜுடனும் சொல்கிறது ‘துணிவு’.
வங்கியில் கொள்ளையடிக்க வரும் கேங்கிற்கு முன்னாடியே அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் செம கூலாக பேப்பர் படிப்பது. கேங்ஸ்டர்களின் துப்பாக்கிகளை பிடுங்கியே அவர்களை துவம்சம் செய்வது என முழு நெகட்டிவ் ஷேடில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்துள்ளார் அஜித்.
அஜித்தின் அந்த வில்லத்தனமான ஆட்டம் மங்காத்தா அஜித்தை நியாபகப்படுத்துகிறது. ஆக் ஷன் காட்சிகள், ‘சில்லா சில்லா’ டான்ஸ், நையாண்டி வசனங்கள் என மிரட்டி இருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் கண்மணி கேரக்டரில் மஞ்சு வாரியர் ஆக் ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி ஆக்சன் காட்சிகளோடு விறுவிறுப்பாக செல்ல, இரண்டாம் பாதியில் வங்கியில் நடக்கும் நூதன மோசடிகள் பற்றி விரிவாக இயக்குநர் எச். வினோத் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட விவகாரங்களை துணிச்சலோடு தொட்டுள்ளார்.
ஒரு மனிதனின் பணத் தேவை, எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், இன்னொருவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது என்பதை ‘சதுரங்கவேட்டை’யில் சொன்ன வினோத், இதில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வங்கிகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார்.
அவசரத்துக்கு கடன் தர்றோம் என்று அள்ளிவிடும் வங்கிகளின் விதிமுறைகள், கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட் என பக்கம் பக்கமாகக் கண்ணுக்கு எளிதில் தெரியாத எழுத்துகளில் தரும் படிவங்களில் என்ன இருக்கிறது என்பதை தோலுரித்து, மக்களை எச்சரிக்கிறது படம்.
மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமா பிரியர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது துணிவு.