ட்ராமா: விமர்சனம்


விவேக் ப்ரசன்னா – சாந்தினி தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விவேக் ப்ரசன்னா, இறுதி முயற்சியாக ஒரு மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுகிறார்.. சாந்தினி கர்ப்பமாகிறார்… அந்த நேரத்தில் ஒரு மர்ம போன் வந்து அவரை அலற வைக்கிறது..

ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி, தனது காதலனை ‘பார்க்கக்கூடாத’ நிலையில் பார்த்து அதிர்கிறார்.. பிரதீப் கே விஜயன் மருத்துவர் என்கிற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடுகிறார்…

மேற்கண்ட மூன்று அதிர்ச்சிக்கதைகளும் ஒரு கட்டத்தில் ’மருத்துவர் உண்மை புத்திரன்’ என்ற புள்ளியில் ஒருங்கிணைகின்றன. இவை எப்படி அவரிடம் வந்து சேருகின்றன? பிரச்சனைகளுக்கும் அவரது கருத்தரிப்பு மையத்துக்கும் என்ன சம்பந்தம்? சிக்கல்கள் எவ்விதம் தீர்வை எட்டுகின்றன? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ட்ராமா’ திரைப்படத்தின் மீதிக்கதை..

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் சகல உணர்வுகளையும் வழக்கமான தன் யதார்த்தமான நடிப்பு மூலம் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். துக்கம்,மகிழ்ச்சி உடனே அதிர்ச்சி என மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய வேடம் சாந்தினிக்கு.அவர் நன்றாகவும் இருக்கிறார் நன்றாக நடித்துமிருக்கிறார்.

இளம் நாயகனாக நடித்திருக்கும் பிரதோஷ், அவரது காதலியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் வேற மாதிரியான ஒரு டிரான்ஸ்பார்மேஷனை கொடுத்து மிரள வைத்திருக்கிறார் ஆனந்த்.

அப்பா முருகேசனாக வரும் மாரிமுத்துவும், அம்மா பார்வதியாக வரும் ரமாவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய்குமாராக வரும் சஞ்சீவ், கான்ஸ்டபிளாக வரும் வையாபுரி, முதலமைச்சராக வரும் நிழல்கள் ரவி, கார் மெக்கானிக்காக வரும் ஈஸ்வர் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் கேமரா படத்தின் தரத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது.