சிறுவயதிலேயே அப்பாவை இழந்த சிறுவன் பொன்வேல், அம்மா மற்றும் அக்கா அரவணைப்பில் வளர்கிறான். அம்மாவும், அக்காவும் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழைத்தார்களை அறுத்து அதை லாரியில் ஏற்றும் பணியை செய்து வருகிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் பொன்வேலும் இந்த பணிக்கு சென்றாலும், அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான்.
அவனது பள்ளி நண்பன் ராகுலுடன் சேர்ந்து வாழைத்தோப்பிற்கு சென்று வேலை செய்யாமல் இருக்க பல திட்டங்களை போட்டாலும் இறுதியில் தன் தாயாரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி தொடரும் சூழலே அமைகிறது. பொன் வேலுக்கு அவருடைய பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் நிகிலா விமல் மீது இனம்புரியாத அன்பு பொன்வேலுக்கு உருவாகிறது.
இந்நிலையில் இந்த சமயத்தில், வாழைத்தார் அறுக்கும் பணிக்கு தனது அக்கா உள்ளிட்ட ஊர் மக்களுடன் லாரியில் பயணிக்கும் சிறுவன் பொன்வேல், தீடிரென்று பாதியில் லாரியில் இருந்து இறங்கி விடுகிறான். தொடர்ந்து பயணிக்கும் லாரி, அதில் பயணிக்கும் மக்களை மிகப்பெரிய துயரத்தில் தள்ளுகிறது. அந்த துயரம் என்ன ? அதன் மூலம் சிறுவன் பொன்வேல் அனுபவித்த வலி என்ன என்பது மீதிக்கதை.
கதையின் நாயகன் சிவனைந்தனாக நடித்திருக்கும் சிறுவன் பொன்வேல், தனது கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார். பூங்கொடி டீச்சர் தனக்கு பிடித்தவர் என்று சொல்லிக்கொண்டு அவர் பயணப்படுவது, வாழைத்தார் வெட்டும் பணிக்கு செல்ல பயந்து நடிப்பது, கமலை வெறுப்பது என அனைத்து இடங்களிலும் எதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். குறிப்பாக க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட பாதகத்தி பாடல் ஒட்டுமொத்த இதயத்தை ரணமாக்கி விடுகிறது அக்கிராம மக்களோடு நாமும் சேர்ந்து பயணித்த மாதிரியான ஒரு அனுபவத்தை கொடுத்ததில் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் தனித்த கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இதிலும் அதை தொடர்ந்திருக்கிறார். தனது படங்கள் மூலம் மனிதஉணர்வுகளை எப்படிக் கடத்த வேண்டும் என்கிற வித்தையை நன்றாக அறிந்து வைத்திருக்கிற மாரி செல்வராஜ் வாழை படத்திலும் அதை செவ்வனே செய்துள்ளார்.