வல்லான் ; விமர்சனம்


பிரபலமான ஒரு கிறிஸ்தவ மத போதகர் ஜெயகுமார் பெரும் தொழிலதிபர். அவருடைய மருமகன் கமல் காமராஜ் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் உயர் அதிகாரி, பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட கமல் காமராஜ் அலுவலகத்தில் பணி புரிந்த தன் வருங்கால மனைவி காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று சுந்தர்.சி இந்த விசாரணை பணிக்கு சம்மதிக்கிறார். சுந்தர் சி தன்னுடைய பாணியில் விசாரணையை மேற்கொள்கிறார். அதில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்கிறது.

அடுத்தடுத்த கொலை, கொலைக்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் என சுந்தர் சி எதிர்பாராத விஷயங்கள் நடக்கிறது. அதை எப்படி அவர் சமாளித்தார்? கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளி யார்? என்பதுதான் படத்தின் கதை.

சுந்தர்.சி.அவருடைய உயரமும் உருவ அமைப்பும் காவல்துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாக இருக்கிறது.துப்பறியும் வேலை செய்பவராக பல படங்களில் நடித்திருக்கிறார்.அதனால் இந்த வேடத்தை அல்வா சாப்பிடுவது போல் அழகாகச் செய்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் ரசிகர்கள் கவனம் பெறுகிறார். மத போதகராக வரும் ஜெயக்குமார் , ஹேபா படேல், அபிராமி வெங்கடாசலம் ,தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கதாபாத்திரங்களை தனது கேமரா கண்கள் மூலம் அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் மணி பெருமாள், தனது பணியின் மூலம் படத்தின் மேக்கிங் மற்றும் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது

வழக்கமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைதான். ஆனாலும் சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பு கூட்டி கவனம் பெற்றுள்ளார் இயக்குனர் மணி சேயோன். அடுத்தடுத்த காட்சிகள் நகருகின்ற பொழுது அது இன்னொரு சஸ்பென்சை கூட்டிக் கொண்டே போவதுபோல திரைக்கதை அமைத்திருப்பதால் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.