ஹைபர் லிங்க் வகை திரைக்கதை பாணியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இத்திரைப்படம் இருக்கிறது. பணம் தான் முக்கியம், அதற்காக எப்படிப்பட்ட தவறுகளையும் செய்யலாம், என்று வாழும் ஐந்து பேர். வறுமை வாட்டினாலும், பிறருக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்.
இந்த ஆறு பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதவர்களாக இருந்தாலும், இவர்களுக்கான பணத்தேவை இவர்களை தொடர்புப்படுத்த, அதனால் இவர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது, என்பதை சுவரஸ்யமான திரைக்கதையோடு ஹைபர் லிங்க் ஜானரில் சொல்வதே ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் கதை.
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், முதல் முறையாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தனி மேனரிசத்தோடு நடித்து அதிகம் கவனம் பெறுகிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, காட்சிகளுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைக் கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கிறார். சகிஷ்னா சேவியர் பின்னணி இசை உறுத்தாமல் படம் பார்க்க வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். ஒவ்வொரு கேரக்டர்களின் கதைக்குள்ளும் இன்னொரு கேரக்டரை இணைத்த விதமும், பகவத் கீதையை கதைக்குள் ஒரு ரெபரன்ஸாக வைத்த திறனும் பாராட்டத்தக்கது விதவிதமான கதாபாத்திரங்கள் அவர்களுடைய மாறுபட்ட தேவைகள் மற்றும் குணாதிசயங்கள் ஆகியனவற்றை வைத்து சுவையான திரைக்கதை அமைத்திருக்கிறார்.சில இடங்களில் குறைவாக இருக்கிறது,சில இடங்களில் யூகிக்க வைக்கிறது,பல இடங்களில் இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.