பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர் சரத்குமார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு விஜய், ஷாம், ஸ்ரீகாந்த் என மூன்று மகன்கள். தனக்கு பிறகு மூவரில் யாரை வாரிசு ஆக்குவது என்பதில் முனைப்பாக இருக்கிறார் சரத்குமார். எந்திரத்தனமாக தொழிலே கதி என்று அவர் இருப்பது விஜய்க்கு பிடிக்கவில்லை. வாரிசு போட்டியில் இருந்து விலகி சரத்குமார் கோபத்துக்கும் ஆளாகி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
சரத்குமாரின் தொழில் சாம்ராஜியத்தை சரித்து அவரது இடத்தை பிடிக்க இன்னொரு தொழில் அதிபரான பிரகாஷ்ராஜ் சதி செய்கிறார். ஷாம், ஸ்ரீகாந்த் இருவரும் வாரிசு நாற்காலியை பிடிக்கும் முயற்சியில் தந்தைக்கு எதிராக மாறுவது அதற்கு வாய்ப்பாக அமைகிறது. அவர்களை பகடை காயாக வைத்து சரத்குமாரை வீழ்த்த பிரகாஷ்ராஜ் களம் இறங்குகிறார்.
சரத்குமார் எடுக்க இருந்த டெண்டர்களும் மகனால் பிரகாஷ்ராஜ் கைக்கு மாறுகின்றன. குடும்பம் சிதறுகிறது. ஏழு வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பும் விஜய்க்கு எதிரிகளுடன் மோதி குடும்பத்தை ஒன்று சேர்த்து தந்தையின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வருகிறது. அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பது மீதி கதை.
தொடர்ந்து ஆக்சன் படங்கள் மட்டுமே நடித்து வந்த விஜய் வெகு பல வருடங்களுக்கு பின் குடும்ப படத்தில் நடித்துள்ளார். குழந்தைத்தனமாக நம்மை ரசிக்கவைப்பதும், சண்டை காட்சிகளில் மாஸ் காட்டுவதும், குடும்பத்தாரிடம் உருகுவது என விஜய் சிறப்பாக நடித்துள்ளார்.
ராஷ்மிகா சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சரத்குமார் நம்மை வியக்கவைக்கிறார், ஆரம்பத்தில் பணக்கார திமிருடன் இருப்பதும், மகன்களால் ஏமாற்றப்பட்டதும் உடைந்து போவதும், விஜய்யிடம் வீட்டில் தங்க முடியுமா என ஏக்கத்துடன் கேட்பதும் என சிறப்பாக நடித்துள்ளார்.
தாய்ப்பாசத்தில் ஜெயசுதா நம்மை உருகவைக்க, கார்ப்பரேட் வில்லனாக நம்மை ரசிக்க வைக்கிறார் பிரகாஷ் ராஜ். யோகிபாபுவும், விஜய்யும் சேர்ந்து நடித்துள்ள காட்சிகள் எல்லாம் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன், உள்ளிட்டோர் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவின் கேமியோ தியேட்டரையே அதிர வைக்கிறது.
குடும்பம், சென்டிமென்ட், காதல், அதிரடி கலவையில் ரசிக்கும்படி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் வம்சி பைடி பள்ளி. மாஸ் நடிகரான விஜய்யை வைத்து நேர்த்தியான குடும்ப படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வென்றும் இருக்கிறார்.