வருணன் ; விமர்சனம்


வடசென்னையின் இரு துருவங்களாக கேன் வாட்டர் சப்ளை செய்யும் வியாபாரிகள் அய்யாவு (ராதா ரவி) மற்றும் ஜான் (சரண்ராஜ்). இருவரும் கேன் வியாபாரத்தொழிலில் போட்டி இருந்தாலும் அவரவர்களுக்கான பகுதிகளை பிரித்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சுமுகமாக தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார்கள்.அய்யாவு சொந்தமாக தண்ணீர் தொழிற்சாலை வைத்திருப்பதால் நல்ல வருமானம் பார்க்கிறார். ஆனால் ஜான் தண்ணீர் வாங்கி தான் கேன் வாட்டர் சப்ளை செய்வதால் வருமானம் டல்லடித்து பண பற்றாக்குறையோடு இருக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பகையாக உருவெடுக்க, அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே ‘வருணன் படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஜோடிகளாக வரும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் கேப்ரில்லா, பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா இந்த இரு ஜோடிகளும் கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து கதையின் நாயகர்களாக தெரிந்திருக்கிறார்கள்.

வாட்டர சப்ளை முதலாளிகளாக அமர்த்தலாக ராதாரவியும் , குடும்பத்தினரின் அயோக்கியத்தனங்களை சமாளிக்க முடியாத திக்குவாய் நபராக சரண்ராஜும் சிறப்பு . சரண்ராஜின் மனைவியாக மகேஸ்வரி மிரட்டி இருக்கிறார். மகேஸ்வரியின் தம்பியாக வரும் வில்லன் சங்கர் நாக் விஜயன் பார்வைக்கு பயங்கரமாக இருக்கிறார். நடிப்பில் அதற்கு நியாயமும் சேர்க்கிறார்.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் கேமரா, வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல் முருகன்.வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பிரச்சனை மையமாகக் கொண்ட கதை என்று ஆரம்பிக்கும்போது எதிர்பார்ப்புகளுடன் நிமிர்ந்து உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால் வழக்கமான பாணியிலேயே செல்லுகிறது வருணன். அதேசமயம் இந்த வியாபாரத்திலும் போட்டி. பொறாமை, சண்டை, கொலை உள்ளிட்ட பல சமூகத் தீமைகள் புகுந்துவிட்டதையும் அழகாக சித்தரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்.