சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கியவர் எஸ் யூ அருண்குமார். பண்ணையாரும் பத்மினியும் என்கிற கிராமத்து படத்தை கொடுத்த இவர் அடுத்ததாக சேதுபதி ஐபிஎஸ் என்கிற அதிரடி ஆக்சன் படத்தையும் கொடுத்தார்.அதனால் இவர் சித்தா போன்ற படத்தை இயக்கிவிட்டு தற்போது வீரதீர சூரன் என்கிற ஆக்சன் படத்தை இயக்கியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது விக்ரமுக்கு எந்த அளவுக்கு கை கொடுத்திருக்கிறது. பார்க்கலாம்..
மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக வைத்து அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் பிருத்விராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சாரமூடுவை என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா திட்டம் போடுகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிப்பதற்காக, மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை பிருத்விராஜ் நாடுகிறார்.
அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம் முதலில் மறுத்தாலும், குடும்பத்தை காரணம் காட்டி மிரட்டுவதால் அவர்களை காப்பாற்ற சம்மதித்து களத்தில் இறங்குகிறார். பெரியவரின் விசுவாசியாக இருந்த விக்ரம் அவரிடம் இருந்து விலகியது ஏன்?, பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே இருக்கும் பகை, இவற்றில் சிக்கிக்கொண்ட விக்ரம் இந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறார்? என்பதை அசத்தலனான ஆக்ஷன் காட்சிகள் மூலம் சொல்வதே ‘வீர தீர சூரன் – பாகம் 2
மனைவி குழந்தையை காப்பாற்றுவதற்காக எந்த எல்லை வரை போவதற்கும் தயாராக இருக்கும் ஒருவரை தன் அற்புதமான நடிப்பில் அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் விக்ரம். படம் முழுவதும் ஒரே ஒரு அழுக்கு வேட்டி, அழுக்கு சட்டைதான் விக்ரமின் காஸ்டியூம். வெறித்தனமான நடிப்பு என்றால் மிகை இல்லை. காளியாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம்.
தான் நடிக்கும் படங்களில் எல்லாம் தனித்த இடம் பிடிக்கும் துஷாரா விஜயன் இதிலும் முத்திரை பதித்துள்ளார். விக்ரமுக்கு ஈடு கொடுத்து முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார். பகை மற்றும் சூழ்ச்சியை மையமாக கொண்டு பயணிக்கும் கதாபாத்திரத்தை தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நிலை நிறுத்தியிருக்கிறார்.
முரட்டுத்தனத்தையும், வன்மத்தையும் மட்டுமே நம்புவதை தன் முகக்குறிகளிலேயே உணர்த்தி விடும் சுராஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பு வேற லெவல்.. மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சுராஜ். தமிழுக்கு புதியதோர் மலையாள நல்வரவு.
மேலும், படத்தில் நடித்த ப்ருத்வி ராஜ், ரமேஷ் இந்திரா உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. கதையை திசைதிருப்பாமல் பயணிப்பதோடு, பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்திவிடுகிறார். ஒரு இரவில் பல சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், அவ்வபோது மாறும் அவர்களது குணாதிசயங்கள், பல சம்பவங்கள், காட்சிக்கு காட்சி வரும் திருப்பங்கள் என்று படத்தை படுவேகமாக பயணிக்க வைத்திருந்தாலும், எந்த இடத்திலுமே திரைக்கதை அலுப்பை தட்டவில்லை. பெரியவர் தனக்காக வேலை செய்யும்படி விக்ரமை பணிப்பதும், பெரியவர் கொலை செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி தனக்காக வேலை செய்யும்படி விக்ரமை நிர்பந்திப்பதும், விக்ரம் என்ன செய்யப் போகிறார் என்பதும் படத்தின் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டே போகிறது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே இல்லாத மாதிரியான ஒரு வித்தியாசமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.