வீராயி மக்கள் ; விமர்சனம்


மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப கதைகள் எப்போதாவது வரும் நிலையில் மீண்டும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் வீராயி மக்கள். இது குடும்பத்தினரின் எந்த மாதிரி பிரச்சனைகளை, சந்தோஷங்களை சங்கடங்களை அலசுகிறது.. பார்க்கலாம்.

கிராமத்தை சேர்ந்த வீராயிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் என நான்கு மக்கள். இதில் அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் ஒரே தெருவில் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதோடு, பகை வளர்த்துக் கொண்டும் வாழ்கிறார்கள். இவர்களது பகை, அடுத்த சந்ததிக்கும் செல்கிறது. அவர்களது பிள்ளைகளும் முறுக்கிக்கொண்டு திரிகிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் வேல ராமமூர்த்தியின் மகனாக வரும் சுரேஷ் நந்தா தனது அத்தை தீபா சங்கரின் மகளான நந்தனாவை காதலிக்கிறார். இந்த காதலால், பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கி விடலாம் என்றும் நினைக்கிறார் சுரேஷ் நந்தா. இவரின் கனவானது நனவானது இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும் நடித்திருந்தாலும், உடன் பிறந்தவர்களுக்காக வாழும் பாசக்கார அண்ணன் என்ற மற்றொரு பரிணாமத்தில் ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுகிறார்.

வேல ராமமூர்த்தியின் தம்பியாக நடித்திருக்கும் மாரிமுத்து, கோபத்தை வெளிக்காட்டுவதாக இருந்தாலும் சரி, சொந்தங்களை உதறும் காட்சிகளாக இருந்தாலும் சரி, அத்தனை இடங்களையும் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். படம் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு நடிகர் இப்போது நம்முடன் இல்லையே என்கிற இழப்பு நம்மை ரொம்பவே வருத்தப்படுத்துகிறது.

நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ்நந்தா, கிராமத்து இளைஞன் தோற்றத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.காதல்,சண்டை ஆகியனவற்றை நன்றாகச் செய்திருக்கும் அவர் உணர்ச்சிகரமான நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

நாயகி நந்தனா எளிய அழகுக்குச் சொந்தக்காரர்.காதல் காட்சிகள் பாடல்காட்சிகளில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது, என்று சபதம் ஏற்ற பெண்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு வழக்கம்போல சிறப்பு.. தங்கையாக தீபா சங்கரும் நடிப்பில் உருக வைக்கிறார்.

நீண்ட நாளைக்கு பிறகு தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கிராமத்து மண்ணையும் மக்களையும் அப்படியே அள்ளித்தந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா, பிரிந்த உறவுகளை நினைத்து பார்க்க வைத்திருக்கிறார். குடும்பங்கள் என்றால் பிரச்சனைகளும், பிரிவுகளும் இருப்பது சகஜம் என்றாலும், உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியும் எத்தகையது என்பதை தனது கோணத்தில் சொல்லியிருக்கிறார். இந்த நவீன காலகட்டத்தில் உறவுகளை கட்டிக்காப்பதில் உள்ள சவால்களை கண்முன் நிறுத்தியுள்ளார். உறவுகள் எவ்வளவ அவசியமானவை என்பதை உரக்க சொன்னதால் இந்த வீராயி மக்களை தாரளமாக வரவேற்கலாம்.