ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் வேட்டையன்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த் நீதிமன்றம் மூலம் தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளுக்கு துப்பாக்கி மூலம் தீர்ப்பு எழுதுகிறார். ஒரு முறை கன்னியாகுமரியை சேர்ந்த பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் தங்களது பள்ளியில் போதை பொருள் கடத்தி பதுக்கி வைத்திருக்க்கிறார்கள் என்ற தகவல் சொல்ல அவர்களை பிடித்து உள்ளே தள்ளுகிறார் ரஜினிகாந்த். பின் சென்னைக்கு துஷாரா விஜயன் மாற்றலாகிறார்.
ஆனாலும் அவரது செயலால் கோபமான எதிரிகள் ஒரு மர்ம நபரை அனுப்பி அவரது பள்ளியிலேயே துஷாராவை பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். போலீஸ் அதிகாரி கிஷோர் தலைமையிலான குழுவினர் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான அசல் கோலார் என்கிற இளைஞர் தான் தனது காமவெறியால் துஷாராவை இப்படி செய்து விட்டார் என அவரை தேடுகின்றனர்.
அரசாங்கத்துக்கு இந்த பிரச்சினையால் நெருக்கடி வர ரஜினியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு குற்றவாளியை சீக்கிரம் என்கவுண்டர் செய்ய உத்தரவிடப்படுகிறது. ஏற்கனவே கிஷோர் தலைமையிலான குழு அசல் கோலார் தான் குற்றவாளி என கூறியிருந்ததால் கடலுக்குள் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் ரஜினி. ஆனால் பின்னாளில் மனித உரிமை கமிஷன் இதை விசாரிக்கும் போது அசல் கோலார் நல்ல இளைஞன் என்றும் துஷாராவும் அவரும் அண்ணன்-தங்கையாக பழகினார்கள் என்றும் இருவருமே சமூகத்திற்கு எதிரான விஷயங்களை எதிர்த்தார்கள் என்றும் தெரிய வருகிறது.
போலியான ஒரு என்கவுண்டரை தான் நடத்தி விட்டோமே என அதிர்ந்து போன ரஜினி எப்படி இதில் அசல் கோலாரை சிக்க வைத்தார்கள், அப்படியானால் உண்மையான குற்றவாளி யார் என விசாரிக்கத் தொடங்குகிறார். விசாரணையில் மிகப்பெரிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. உண்மை குற்றவாளியை ரஜினிகாந்த் பிடித்தாரா ? வழக்கம் போல என்கவுண்டரில் போட்டு தள்ளினாரா ? அல்லது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தாரா என்பது மீதிக்கதை.
சமீப காலத்திலேயே தர்பார், ஜெய்லர் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. அவரது வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் அழகாக வழக்கம் போல அசத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் பின்னி பெடல் எடுக்கிறார். தவறான ஒரு என்கவுன்டரை செய்துவிட்டோமே என அவர் மருகும் போது கண்கலங்க வைக்கிறார்.
பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மனித உரிமை கமிஷன் நீதிபதியாக மிக பொறுப்பான கதாபாத்திரத்தில் இந்த சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை தனது நடிப்பால் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரஜினிக்கு அடுத்ததாக அவருடனேயே அவரது சிஷ்யன் போல சுற்றும் பகத் பாசிலுக்கு இது நிச்சயம் புதிதான கதாபாத்திரம். ரஜினியுடன் சேர்ந்து காமெடி களை கட்ட உதவி இருக்கிறார்.
கதாநாயகியாக மஞ்சு வாரியர். ரஜினியின் மனைவியாக நடித்துள்ள இவர் காட்சிகளில் வரும் நேரங்களில் எல்லாம் மிக சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். துஷாரா விஜயனுக்கு மிகவும் வெயிட்டான கதாபாத்திரம் இந்த படத்தின் கதையை நகர்த்தி செல்ல உதவி இருப்பதே அவர்தான். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் செவ்வனே செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
போலீஸ் அதிகாரியாக வரும் ரித்திகா சிங் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற செம பிட் ஆக இருக்கிறார். வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கிஷோர், அபிராமி ஆகியோர் ஒரு பக்கம் மிரட்ட இடைவேளைக்கு பின் என்ட்ரி கொடுத்தாலும் ஒரு கார்ப்பரேட் வில்லனாக நடிகர் ராணா வழக்கம்போல மிரட்டி இருக்கிறார். அவருக்கும் ரஜினிக்குமான ஆடு புலி யுத்தம் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர ரோகிணி, ரக்சன், அனந்த் நாக், மலையாள வில்லன் சாபுமோன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு நடிப்பால் கவனம் ஈர்த்து இருக்கிறார்கள். அனிருத் இசையில் ஆரம்பமே மனசிலாயோ பாடலுடன் அமர்க்களமாக துவங்குகிறது. ஆனாலும் ஜெயிலர் படத்தில் பின்னணி இசையில் அதிர வைத்த அனிருத் இந்த படத்தின் கதைக்காக கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார். இது ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.
இயக்குனர் ஞானவேல், ரஜினிகாந்த் போன்ற ஒரு பெரிய ஹீரோவை வைத்துக்கொண்டு என்கவுண்டர், மனித உரிமை, நீட் கோச்சிங், தாமதிக்கப்பட்ட நீதி என பல விஷயங்களை ஒரே கதையில் உள்ளடக்கி அவற்றை கோர்வையாக விறுவிறுப்புடன் நகர்த்தி சென்று இருக்கிறார். எந்த இடத்திலும் போரடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அது படம் முழுவதுமே தெரிகிறது .
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து தான் இந்த வேட்டையன்.