விடுதலை 2 ; விமர்சனம்


முதல் பாகத்தில் போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையே நடந்த மோதல், வாத்தியாரின் கைது, அதிகாரிகளின் அதிகார வர்க்கம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்த வெற்றிமாறன், இந்த 2ஆம் பாகத்தில் பாகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களை, நாம் அறிந்த, கேள்விப்பட்ட கடந்த கால சமகால சம்பவங்களை வைத்து புரட்சிகரமான கதையாக் கொண்டு சென்றிருக்கிறார்.

சுருக்கமாக சொன்னால் விடுதலை’ முதல் பாகத்தில் கைது செய்யப்பட்ட பெருமாள் என்ற பள்ளிக்கூட வாத்தியார், போராளியானது எப்படி? ஏன், அவர் போராளியானார்? அவர் விடுவிக்கப்பட்டாரா, இல்லையா? என்பது தான், ‘விடுதலை – பாகம் 2’.

பெருமாள் என்ற கதாபாத்திரத்தில், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் தொடங்கி, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என்று பல முகங்களோடு பயணித்து கவனம் ஈர்த்திருக்கும் விஜய் சேதுபதி, காதலர் மற்றும் கணவராகவும் தனது இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார்.

தோழருக்கேற்ற தோழியாக வருகிறார் மஞ்சுவாரியர். பெற்ற அப்பா மற்றும் சகோதரனையே கொல்லச் சொல்லும் புரட்சிப் பெண் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.அவரது சிகை அலங்காரமும் அதற்கான காரணமும் அதிரவைக்கிறது.

முதல் பாகத்தில் கதையின் நாயகன் குமரேசனாக நடித்து படத்தை நகர்த்தி சென்ற சூரி, மனசாட்சிக்கு துரோகம் இழைக்காதவராக வருகிறார். அதீமயம் இந்த இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி ஆக்கிரமித்து கொள்வதால் முதல் பாதி அளவுக்கு, இதில் சூரிக்கு வேலை இல்லை.

சாதியப் பெருந்திமிருக்கு எதிராகப் போராடும் கருப்பனாகக் கென் கருணாஸ் நன்றாக நடித்துள்ளார். கம்யூனிச தலைவராகவும், விஜய் சேதுபதியின் அரசியல் குருவாகவும் நடித்திருக்கும் கிஷோர், தனது அனுபவம் வாய்ந்த படிப்பு மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். வங்க போராளியாக சில காட்சிகளில் தலை காட்டும் இயக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன், போஸ் வெங்கட், வின்செண்ட் அசோகன் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்

இளையராஜாவின் பின்னணி இசையும், ’மனசுல ஒரு மாதிரி’, ‘தினம் தினம் உன் நினைப்பு’ பாடலும் கதைக்கு வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் கேமரா மக்கள் பயணிக்க முடியாத இடங்களில் பயணித்து, அடர்ந்த வனப்பகுதியின் ஆபத்தை வியக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக போராளிகளுக்கும், காவல் படைக்கும் இடையே நடக்கும் இறுதி மோதல் காட்சி மிரட்டல்,

அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை வெற்றிமாறன் விரிவாக மனதை தொடும்படி விவரித்து இருக்கிறார். இருப்பினும் பிரச்சினைகளுக்கு கும்பல் வன்முறை மூலம் தீர்வு காணலாம் என பெருமாள் வாத்தியார் முன்வைக்கும் கருத்தினை ஜனநாயகத்தை நேசிக்கும் பார்வையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதேசமயம் ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என சாதாரண மனிதராக வாழும் எதார்த்த வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன் .