ஜாக்கிசான் நடித்த படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டன 30 வருடங்களுக்கு முன்பு இங்கே இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஜாக்கிசான் ரசிகர்கள் அதே எதிர்பார்ப்புடன் தான் இப்போதும் அவரது படம் வராதா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு எதிர்பாராத விருந்தாக வெளியாகி இருக்கிறது இந்த விஜயபுரி வீரன்.
பூர்வ ஜென்மத்தையும் நடப்பு காலத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட கதை தான். இதற்கு முன்பு ராஜமௌலியின் மகதீரா உள்ளிட்ட படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இரண்டு தேசங்களுக்குள் நடக்கும் கதை.
ஆரம்பத்தில் ஒரு அழகான பெண்ணை சிலர் துரத்திக் கொண்டு வருகிறார்கள். ஜாக்கி சானும் அவரது படையின் தளபதியான நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை காப்பாற்றி தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். அந்தப் பெண்ணின் மீது தளபதிக்கு காதல் வருகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு ஜாக்கி சான் மீது காதல் வருகிறது. இந்த முக்கோண காதல் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இந்த பெண்ணை அடைவதற்காக எதிரி நாட்டு மன்னன் படை எடுத்து வருகிறான். இதுதான் கதை.
இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஜாக்கிசானுக்கு இது போன்ற கனவு அடிக்கடி வந்து செல்கிறது. குறிப்பாக அவரிடம் ஒரு மரகத நாணயம் கிடைத்த பிறகு தான் இப்படி கனவுகள் தோன்றுகின்றது. இந்த கனவுக்கும் தன்னிடம் கிடைத்த பொருளுக்கும் என்ன சம்பந்தம் என ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறார். அவருடன் பூர்வ ஜென்மத்தில் உடன் இருந்தவர்கள் அனைவரும் இப்போதும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக உடன் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
ஜாக்கி சான் தனது 70ஆவது வயதில் நடித்துள்ள படம் இது என்றால் நம்ப முடியவில்லை. ஒரு பக்கம் அவர் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும் இன்னொரு பக்கம் எ ஐ தொழிநுட்பம் மூலம் அவரே இளம் வயது கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த தோற்றத்தை மிகவும் நேர்த்தியாக உருவாக்கி இருப்பதால் இளம் வயது ஜாக்கிசானை நம்மால் இன்னும் அதிகமாக ரசிக்க முடிகிறது. வழக்கம் போலசண்டை காட்சிகளுக்கும் எந்த குறைவையும் அவர் வைக்கவில்லை. தனது நடிப்பிலும் தோற்றத்திலும் இரண்டு காலகட்டங்களுக்கும் ஏற்ற வித்தியாசத்தை அழகாக காட்டி இருக்கிறார்,
Yixing Zhang, Aarif Lee, Chen Li, and Alan Dawa Dolma உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குனர் ஸ்டான்லி டோங்கும் ஜாக்கி சானும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில் விஜயபுரி வீரனை ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவே கொடுத்திருக்கிறார்கள்.