விக்ரம் விமர்சனம்

1986-ல் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தையும், 2019-ல் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தையும் வைத்து, அதன் தொடர்ச்சியாக விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

படத்தின் ஆரம்பத்திலேயே போலீஸ் அதிகரிகளான காளிதாஸ் ஜெயராம், ஹரிஷ் பெராடி ஆகிய இருவரையும், கமல்ஹாசனையும் முகமூடி அணிந்த கும்பல் ஓன்று கொலை செய்கிறது. இந்த கொலைகளை பற்றி விசாரிக்க போலீஸ் அதிகாரி செம்பன் வினோத் ஜோஸ், அண்டர்கவர் வேலை செய்யும் பஹத் பாசிலை அழைக்கின்றார். பஹத் பாசில் தன குழுவுடன் விசாரனையில் இறங்க, போலீஸ் அதிகாரிகளையும், கமல்ஹாசனையும் கொன்றது யார்? அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர் என கண்டடுபிடிக்கும் பஹத் பாசிலுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? அடுத்து என்ன? என்பது தான் விக்ரமின் மீதிக் கதை.

4 வருட இடைவெளிக்குப் பின்பு திரையில் கமல். அவருக்கு 67 வயது ஆகிறது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. அப்படி ஒரு எனர்ஜியுடன் சண்டைக் காட்சிகளில் பிண்ணி இருக்கிறார். கமலுக்கு இணையாக விஜய் சேதுபதி, பஹத் பாசில் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி முழுவதும் பஹத் பாசில் தான். எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. உங்களுக்கு இருந்தால் மீறப்படும் என திமிரான உடல்மொழியும், காதலி காயத்ரியுடன் கொஞ்சலும் என அசத்தியிருக்கிறார். பஹத் பாசிலை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். அதே நடிப்பு சாயல் அவரிடத்தில் தெரிந்தாலும், தோற்றத்திலும், உடல்மொழியிலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.

காளிதாஸ் ஜெயராம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும், முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

செம்பன் வினோத், நரேன், ஜாபர் சித்திக், காயத்ரி ஷங்கர் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கிளைமாக்ஸ் சர்ப்ரைஸாக சூர்யா, வரும் சில நிமிடங்களில் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

பின்னணி இசைக்காக அனிருத் கடுமையாக உழைத்திருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

அண்மைக் காலமாக திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வரும் கிருஷ் கங்காதரனுக்கு இது முக்கியமான படம். பெரும்பாலும் இரவு காட்சிகள் தான். அதை அழகாக திரையில் காட்ட கடுமையாக உழைத்திருக்கிறார் கிரிஷ்.

சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவு ஒவ்வொன்றும் வேற லெவல். படத்தை எந்த குழப்பமும் இல்லாமல், பரபரப்பாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் பிலோமின் ராஜ்.

போதைப்பொருளை மையப்படுத்தி ஒரு ஆக்சன் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மொத்தத்தில் விக்ரம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.