தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் இருக்கும் கதைகளும், உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் படங்கள் வெகுவாக குறைந்து விட்டன. முத்தையா போன்ற இயக்குனர்களே கிராமத்து கதைகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அப்படி முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் விருமன்.
தன் அம்மா சரண்யாவின் மரணத்திற்குக் காரணமான அப்பா பிரகாஷ் ராஜ் மீது கோபம் கொண்டிருப்பவர் கார்த்தி. தன் அம்மாவின் இறுதிசடங்குக்கு கூட வராத தன் அப்பாவையும், மூன்று அண்ணன்களையும் தன் அம்மா மறைந்த வீட்டிற்கு வரவழைப்பேன் என சபதம் கொண்டுள்ளார். பணத்தை பெரிதென நினைக்கும் பிரகாஷ் ராஜும், அவரின் பேச்சை தட்டாத மூன்று அண்ணன்களும் கார்த்தியை புரிந்து கொண்டார்களா, கார்த்தி தன் சபதத்தை நிறைவேற்றினாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
பருத்திவீரன் படத்திலேயே கிராமத்து இளைஞன் கதாப்பாத்திரத்தில் தன் முத்திரையை பதித்தவர் கார்த்தி. இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஆக்சன், காதல், கோபம், பாசம் என அனைத்து ஏரியாவிலும் சிக்சர் அடித்துள்ளார்.
தமிழ் சினிமா நிறைய கோவமான அப்பாக்களை பார்த்துள்ளது. ஆனால் இப்படி ஒரு மோசமான கொடூரமான அப்பாவை பார்த்திருகிறதா என்றால் நிச்சயம் இல்லை. தாசில்தாராக, கோவக்கார அப்பாவாக பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் அசத்தியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிக்கு இது முதல் படம். அறிமுக படத்திலேயே அசத்தியுள்ளார். நடிப்பு, நடனம் என பட்டையை கிளப்பியுள்ளார்.
காமெடிக்கு சூரி, சூரிக்கு கிராமத்து கதாப்பாத்திரம் இயல்பாகவே பொருந்திவிடுகிறது. கிராமத்து இளைஞன் என்றால் தனி உற்சாகம் வந்து விடும் போல. இவருடன் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, மைனா நந்தினி என அனைவரும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
கார்த்தியின் தாய் மாமனாக வரும் ராஜ்கிரண். இவருக்கு படத்தில் காட்சிகள் குறைவு என்றாலும் முக்கியமான கதாப்பாத்திரம். அதிலும் தன் பாசத்தால் நம்மை கட்டி போடுகிறார்.
இவர்களுடன் சரண்யா, இளவரசு, வடிவுக்கரசி, மனோஜ் பாரதிராஜா, ஆர்.கே.சுரேஷ் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, தேனி சுற்று வட்டாரத்தை நம் கண் முன்னே நிறுத்திவிட்டது.
உறவுகளுடனான வாழ்க்கை அழகானது என இந்த விருமன் கூறுகிறான். அப்பா மகனுக்குமான மோதல் தான் இந்த படம், இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
மொத்தத்தில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்த விருமனை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.