விருந்து ; விமர்சனம்


நாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மாவை கொலை செய்யும் கும்பல் அடுத்து காவல்துறை பாதுகாப்பையும் மீறி நிக்கி கல்ராணியையும் கொலை செய்ய முயற்சிக்கிறது. எதிர்பாராமல், அடர்ந்த வனப்பகுதியில் அந்த கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்ள அவர்களிடம் இருந்து நிக்கியை காப்பாற்றும் அர்ஜுன், வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் நிக்கி கல்ராணி அர்ஜுனையே கொலை செய்ய முயற்சிக்கிறார். இதென்ன புது கலாட்டா என்கிறீர்களா ? அதுதான் விருந்து.. அறுசுவையுடன் படைத்திருக்கிரார்களா ? பார்க்கலாம்.

மலையாளத்தில் உருவாக்கி தமிழிலும் வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் மலையாள படங்களுக்கே உரிய பல அமசங்கள் இருக்கின்றன. பொதுவாக, திரில்லர் படங்களில், ஒருவர் கொலைக் குற்றவாளி என்ற சந்தேகத்துடன் கதை நகரும். திடீரென வேறொருவர் மீது சந்தேகம் செல்லும். இது போல பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகள் பல படத்தில் உள்ளன.

கடந்த சில வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் கூட நடித்து வந்த அர்ஜுன், இதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமே வலம் வருகிறார். அவருக்கு ஜோடியோ, டூயட் பாடலோ இல்லை என்றாலும், தனது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார்.

பணக்காரப் பெண் பெர்லியாக நிக்கி கல்ராணி பெற்றோரின் சாவில் மர்மத்தை கண்டுபிடிக்க முயல்வதும், அதற்காக எடுக்கும் முயற்சிகள், தேடல்கள், துரத்தல்களுடன், இறுதியில் வரும் திருப்பத்திற்கு முக்கிய புள்ளியாக அமைந்து படத்தில் சிறப்பாக செய்துள்ளார்.

தயாரிப்பாளரான கிரிஷ் நெய்யார் கதையுடன் தொடர்புடைய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கடைசிக் காட்சியில் மட்டுமே வரும் ஹரிஷ் பெராடி தன்னுடைய அக்மார்க் வில்லன் நடிப்பில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

ரதீஷ் வேகாவின் பின்னணி இசை கதையின் பரபரப்புக்கு உதவுகிறது. அதேபோல காடும் காடு சார்ந்த பகுதியில் பெரும்பாலும் நகரும் கதைக்கு ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு உறுதுணையாக அமைந்திருக்கிறது.

பத்திரிகை செய்திகளை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தாமர கண்ணன், படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளையும், திரைக்கதையையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் பிரியர்களுக்கு நல்ல விருந்து தான்.