ருத்ரவனம் கிராமத்தில் குழந்தைகள் மர்மமான முறையில் மடிகிறார்கள், அதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் வெங்கடாசலபதி தான் என கருதி அவரை மனைவியோடு சேர்த்து எரித்துக் கொள்கின்றனர். இறந்த தம்பதியின் மகன் பைரவா அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கப்படுகிறான்.
பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு நகரத்தில் படித்து வளர்ந்த சூர்யா, அம்மாவின் அழைப்பை ஏற்று ருத்ரவனம் என்ற அவர் கிராமத்துக்குச் செல்கிறார். அக்கிராமத்தின் அழகும் அங்குவாழும் மனிதர்களும் அவரைக் கவர்கின்றனர். அவ்வூரின் பெரிய மனிதர் ஹரிச்சந்திராவின் மகள் நந்தினியை சூர்யா காதலிக்கிறார். நந்தினியும் சூர்யாவைக் காதலித்தாலும் அதை வெளிப்படுத்தாமல் ஒளித்து வைக்கிறாள்.
திடீரென்று கிராமவாசிகளில் சிலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணிக்கிறார்கள். அதன்பின்னாலுள்ள மர்மத்தை அவிழ்க்க முயலும் சூர்யா, அதைக் கண்டுபிடித்தாரா? அவர் காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.
படம் தொடங்கி முடியும் வரை சீட் நுனியில் உட்கார வைத்து, பல ட்விஸ்ட்களை வைத்து அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கிறார் டைரக்டர். சமஹத் சாய்நூதின் ஒளிப்பதிவு இன்னோரு ஹீரோ என்று சொல்லலாம். ஆந்திர மக்களின் கோபத்தின் வெப்பத்தை கேமராவில் அழகாக காட்டியுள்ளார்.
அஜனீஸ் லோக் நாத்தின் பின்னணி இசை காட்சிகளில் பயத்தை கூட்டுகிறது. காதல், கோபம், இயலாமை என்று கலந்த நடிப்பை தந்துள்ளார் சம்யுக் கத்தா. ஹீரோ சாய் தரம் தேஜ் சரியான தேர்வு. ஊர் தலைவர், பூசாரி, அகோரி என படத்தில் நடித்த அனைவருமே சிறந்த நடிப்பை தந்துள்ளார்கள்.
நாயகனாக நடித்துள்ள சாய் தரம்தேஜ், கதையில் தனக்குத் தரப்பட்டிருக்கும் வெளியைத் தாண்டாமல் நடித்திருக்கிறார். நாயகனை விட கதையில் அதிக முக்கியத்துவம் கொண்டிருக்கும் நாயகி நந்தினியின் கதாபாத்திரத்துக்கு சம்யுக்தா சரியான தேர்வு என படம் முழுவதிலும் உணர்த்திவிடுகிறார். கிராமத்துப் பெண், அவர் பின்னாலிருக்கும் ரகசியம் என அழகும் பூடகமும் நிறைந்த நடிப்பை மிகையில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் விரூபாக்ஷா பார்க்க வேண்டிய த்ரில்லர் படம்