இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஏழு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள படம் இது. அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாலா என்ன சொல்லியுள்ளார் ? பார்க்கலாம்.
கன்னியாகுமரி பகுதியில் ஒரு பாதரின் அடைக்கலத்தில் அருண் விஜய்யும் அவர் தங்கையும் வாழ்கிறார்கள். பேச்சு திறன் மற்றும் கேட்கும் திறன் இல்லாதவரான அருண் விஜய் கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறார். டூரிஸ்ட் கைடான ரோஷினி, அருண் விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அருண் விஜய் தேவையில்லாமல் வம்பு இழுத்து வருவதால் பக்கத்து ஊரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் ஆசிரமத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.
அங்கே சேர்ந்த சில நாட்களில் அங்குள்ளவர்களின் அன்பை பெற்று விடுகிறார். அதே சமயம் அங்கு நடக்கும் ஒரு செயல் அவரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. அதை தொடர்ந்து இரண்டு கொலைகளை குரூரமாக செய்கிறார் அருண் விஜய். தானே செய்ததாக சென்று போலீசிலும் சரணடைகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது.
இருந்தாலும் சிறப்பு புலனாய்வு அதிகாரி சமுத்திரக்கனி இந்த வழக்கை விசாரிக்கிறார். இந்த சமயத்தில் மூன்றாவதாக ஒரு கொலையையும் செய்யப் போவதாக கூறுகிறார் அருண் விஜய்.
அந்த கொலையையும் செய்தாரா ? அதற்குள் சமுத்திரக்கனி அவரை பிடித்தாரா ? எதற்காக இந்த மூன்று கொலைகளை அருண் விஜய் செய்ய வேண்டும் ? இவரை தடுத்து காப்பாற்ற முயலும் தங்கை மற்றும் காதலியின் அன்புக்காக அருண் விஜய் கட்டுப்பட்டு மாறினாரா என்பது மீதிக்கதை.
இயக்குநர் பாலா கொடுக்கும் கஷ்ட்டத்தை அனுபவித்தால் அடுத்தக் கட்டத்திற்கு எளிதில் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அருண் விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். இயக்குநர் பாலா வடிவமைத்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் அருண் விஜய் நடித்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ், கன்னியாகுமரிக்கென பிரத்யேக வேலையான சுற்றுலா வழிகாட்டி வேடத்தில் நடித்திருக்கிறார். கலகலப்பான பேச்சு, காதல்பார்வை, கலக்கம் ஆகிய உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தங்கையாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ரிதாவின் நடிப்பையும் நாம் வெகுவாக பாராட்டலாம். தனது அண்ணனை நினைத்து ஏங்கி ஏங்கி அழும் காட்சியில் நம்மையும் அவரோடு சேர்ந்து பயணிக்க வைத்து விட்டார் ரிதா.
துணிச்சல் நிறைந்த முடிவுகளை சொல்லும் நேர்மையான நீதிபதி குபேரனாக வரும் இயக்குநர் மிஷ்கின், மிடுக்கான காவல் துறை சிறப்பு அதிகாரியாக வரும் இயக்குநர் சமுத்திரக்கனி இருவரின் பங்களிப்பு மிக சிறப்பு.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா, சாயாதேவி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம். குறிப்பாக, ‘யாரோ நீ யாரோ’ பாடல் மயக்குகிறது. சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை, படத்துக்கு பலம்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட விளிம்புநிலை இளைஞனை கதையின் நாயகனாக சித்தரித்து, எளிய மக்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு அந்த நாயகன் மூலம் கடும் தண்டனை கொடுப்பதை தனது படங்களின் முக்கிய அம்சமாக வைத்திருக்கும் இயக்குநர் பாலா, இந்த படத்திலும் அதே பாணியை பின்பற்றி தன் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.