காலாவுக்கு 14 இடத்தில் வெட்டு ; சென்சார் அடாவடி

 

ரஜினி அரசியலில் குதித்துள்ள இந்த சமயத்தில் தமிழக மக்கள் மட்டுமல்ல, ரஜினியும் ரொம்பவே எதிர்பார்க்கிற படம்தான் காலா. கிட்டத்தட்ட கபாலி பார்ட்-2 போல உருவாகியிருக்கும் இந்தப்படம், ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு ஓரளவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. தற்போது ஸ்ட்ரைக் நடந்துவந்தாலும், இந்தப்படம் ஏப்ரல்-27 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் படத்தை அவசரம் அவசரமாக சென்சாருக்கு அனுப்பினார்கள்.

படத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டார்களாம். அதுமட்டுமல்ல. சில வசனங்களுக்கு மியூட், சில காட்சிகளுக்கு கட் என்று தனது அதிகாரத்தை சற்று வேகமாகவே காட்டிவிட்டார்களாம். மொத்தம் 14 இடங்களில் வெட்டு விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதில் கடும் அப்செட் ஆகியிருந்த இயக்குனர் பா.ரஞ்சித், தணிக்கை உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக முக்கியமான நான்கு காட்சிகளை நீக்கவே முடியாது என உறுதியாக நின்றாராம் பா.ரஞ்சித். ஆனால் சில வசனங்கள் ஆளுங்கட்சியை பதம் பார்க்கிற வகையில் இருப்பதாக சென்சார் அதிகாரிகள் நினைப்பதால், தங்களுக்கு மேலிடத்தில் இருந்து சிக்கல் வந்துவிடுமோ என நினைத்து தான் இத்தனை இடங்களில் கட் கொடுத்துள்ளார்களாம்.

ஏப்ரல் 27 ந் தேதி படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று முதலில் நினைத்தவர்கள், அப்படியே யு/ஏ சர்டிபிகேட்டுடன் ரிலீஸ் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார்களாம். ஆனால் திரையுலகில் தற்போது நடைபெறும் ஸ்டிரைக். அது முடிவுக்கு வந்தபின் வரிசைப்படிதான் படங்கள் வெளியீடு என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருப்பதால், கிடைத்த நேரத்தில் மேல் முறையீட்டுக்கு போகலாமே என்கிற யோசனையில் இருக்கிறாராம் இயக்குனர் பா.ரஞ்சித்.