மகள் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் சேரவேண்டும் என மகளின் எதிர்காலம் பற்றி கனவு காணும் ஒரு தாய், தன்னுடைய கனவுகளை மகளுக்காகவும் கணவனுக்காகவும் ஏன் சுருக்கிக்கொள்ள வேண்டும்..? இப்படி ஒரு கேள்வியை பல பெண்கள் தங்களது வாழ்க்கையில் தங்களைத்தானே கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
கணவனின் ஆளுமைக்குள் அடங்கிவிடுகிற, மகளின் எதிர்ப்பை கூட சமாளிக்க முடியாத, அலுவலகத்தில் மற்றவர்களின் கிண்டல்களுக்கு பதிலடி தர தயங்குகிற ஜோதிகாவின் கதாபாத்திரம் யதார்த்த வாழ்வில் நம் கண்ணே தினசரி பலரின் உருவத்தில் உலா வரத்தானே செய்கிறது.
கணவன் ரகுமானுக்கு வேலைக்காக வெளிநாடு போகமுடியாமல் போய்விடுமோ என்கிற பதட்டம் மனைவியின் மீது கோபமாக மாறுகிறது.. தனது கவனக்குறைவால் பண்ணிய ஒரு விபத்தை மனைவியின் மேல் தூக்கி போடும் அளவுக்கு வெளிநாட்டு வேலை மோகமாக மாறுகிறது.
மகளுக்கோ அந்த 13 வயதில் தன்னால் வெளிநாடு போய் படிக்க முடியாதோ, அதற்கு அம்மா அம்மா தடையாக இருப்பாளோ என்கிற அறியா வயது கோபம்.. கணவனின் அப்பட்டமான சுயநலம், மகளின் தன்னிலை அறியா சுயநலம் இரண்டையும் தனது தன்னம்பிக்கையை வளர்த்து ஜோதிகா எப்படி உடைக்கிறார் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
நாட்டின் ஜனாதிபதியை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே அவரை பார்த்ததும் பயத்தில் பேசமுடியாமல் மயக்கம் போட்டு விழும் ஜோதிகா, அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒரு திட்டம் குறித்து அதே ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்காக செல்லும்போதும், கணவனிடம், மகளிடம் தான் இழந்த தனது சுயமரியாதையை மீட்டெடுக்கும் காட்சிகளிலும் ஜோதிகாவின் கண்களில், நடிப்பில் மின்னல் பளிச்சிடுகிறது.
அபிராமி, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லிகணேஷ், பிரேம் என பலரும் பாசிடிவ் கதாபாத்திரங்களாக வலம் வருவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அழுத்தமான கதைக்கு இரண்டு பாடல்கள் போதும் என தீர்மானித்து இரண்டையும் அற்புதமாக கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
36 வயதுக்கு மேல் என்ன வேண்டிக்கிடக்கு என்பது தான் இன்றைய பல பெண்களின் எண்ணமும். ஆனால் இந்த 36 வயதினிலே படமும் ஜோதிகாவின் கேரக்டரும் குறைந்த பட்சம் சில நூறு பேருக்காகவது இனி அவர்களுக்கான கனவுகளை நோக்கி ஓடும் உந்து சக்தியை தரும் என்பது உறுதி.