முடிந்தது ஸ்ட்ரைக்… காமெடி நடிகர்களுக்கு இனி தினம் சித்தரவதை தான்..!


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தம் நடைபெற்றதால் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. தற்போது ஒருவழியாக திரையுலக பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டதால் நாளை முதல் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என தெரிகிறது.. ஆனால் இதற்குள் ஒரு இடியாப்ப சிக்கல் ஒளிந்துள்ளது.. யாருக்கு தெரியுமா..?

ஒரு மாதமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாத ஹீரோக்களுக்கோ, ஹீரோயின்களுக்கோ மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதில் பெரிய பிரச்சினையில்லை. காரணம் அவர்கள் ஒரே சமயத்தில் ஒரு படத்தில் மட்டும்தான் அதிகம் நடிப்பார்கள். ஆனால், சிக்கல் யாருக்கென்றால் காமெடி நடிகர்களுக்குத்தான்.. காரணம். அவர்கள் தான், பெரும்பாலும் ஒரே சமயத்தில் பத்து படங்கள் வரையிலும் நடிப்பார்கள். தற்போது நடைபெற்ற போராட்டத்தால் அவர்களுக்குத்தான் அடுத்த சில மாதங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்

ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே நடித்து பாதியில் நிற்கும் ஒவ்வொரு படத்திலிருந்தும் இப்போது மீதிப்படத்தை நடித்து கொடுப்பதற்கு அவர்களுக்கு அழைப்புகள் வரும். அதனால் யார் படத்திற்கு முதலில் முன்னுரிமை கொடுத்து கால்ஷீட்டை பிரித்து கொடுப்பது என்பதில்தான் அவர்களுக்கு கட்டாயம் குழப்பமாக இருக்கும். அவற்றை சமாளித்து சரி செய்வதற்குள் அவர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும்.

குறிப்பாக யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், மனோபாலா, சூரி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள்தான் இந்தப் பிரச்சினையில் சிக்குவார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தால் சொல்ல வேண்டியதில்லை. சிரிப்பு நடிகர்கள் சிக்கலில் சிக்கிய நடிகர்களாகிவிடுவார்கள்.