ஜெயம் ராஜா பிறந்த தகவலை அவரது அப்பாவுக்கு தெரிவித்த நாய்


கிட்டத்தட்ட 20 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற பௌ பௌ’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பிரதீப் கிளிக்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான பாசப்பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ மட்டும் டீசர் வெளியீடு நடைபெற்றது.

இந்த விழாவில் எடிட்டர் மோகன், அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய எடிட்டர் மோகன் தன் குடும்பத்திற்கும் நாய்க்குமான பாசப்பிணைப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

அவர் ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருந்தபோது அவரது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாராம். அந்த சமயத்தில் அவர் மனைவியுடன் தாங்கள் வளர்த்த நாயும் கூடவே சென்று மனைவிக்கு ஒத்தாசையாக கூடமாட இருந்து கவனித்துக் கொண்டதாம்.. மனைவிக்கு குழந்தை பிறந்து குழந்தையின் அந்த சத்தத்தைக் கேட்டதும் அந்த நாய் துள்ளிக் குதித்து ஓடி வந்து வீட்டில் இருந்த எடிட்டர் மோகனிடம் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதாம். அதன் சந்தோசம் எதனால் என புரியாமல் குழம்பி நின்ற மோகனுக்கு தொலைபேசியில் குழந்தை பிறந்ததாக செய்தி வந்ததும், அந்த செய்தியை சொல்வதற்காகத்தான் இந்த நாய் அவ்வளவு சந்தோசமாக ஓடிவந்து உள்ளது என்பதை அறிந்து கொண்டாராம். இந்த படத்திலும் இதுபோன்று நாய்க்கும் மனிதர்களுக்குமான பாசம் வெளிப்படும் என தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார் எடிட்டர் மோகன்