“என்னைவிட பிரகாஷ்ராஜ் எந்தவிதத்தில் உசத்தி..? ; வில்லன் இயக்குனர் காட்டம்..!


இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடக்காத அதியமெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும்.. வருடந்தோறும் தவறாமல் கொடுக்கப்பட வேண்டிய தமிழக அரசு விருதுகளை கூட ஆறு வருஷத்திற்கு மொத்தமாக அறிவித்திருக்கும் செயலைக் கூட அந்தவகையில் தான் சேர்க்கவேண்டும். அதில் கூட இன்னும் இரண்டு வருடங்களுக்கு அறிவிக்காமல் பாக்கி வைத்துள்ளார்கள் என்பது தனிக்கதை..

இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் ரிட்டையர்டு ஆகி எங்கே இருக்கிறார்கள் என தேட வேண்டிய சூழலும் இருக்கிறது. அது ஒருபக்கம் இருக்க, 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜூக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

அதே வருடத்தில் ‘அங்காடி தெரு’ படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கியவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.. அந்தப்படத்தில் அவரது நடிப்புக்கு பாரட்டுக்கள் குவிந்தன. அங்காடித்தெரு என்றால் இப்போதும் அவர் ஞாபகம் தான் முதலில் வந்து நிற்கும்.. இன்னும் சொல்லப்போனால் அந்தப்படத்திற்கு பிறகுதான் அவர் பிசியான நடிகராக மாறினார்..

அப்படிப்பட்ட தனது வில்ல நடிப்பைவிட, பிரகாஷ்ராஜின் வில்லன் நடிப்பு எந்தவிதத்தில் உசத்தியாக போய்விட்டது என கொந்தளிக்கிறார் வெங்கடேஷ். உண்மைதானே..? அடியாட்களை வைத்து அடித்து, கொலைசெய்வது என வீரத்தை காட்டுவது மட்டும் தான் வில்லத்தனமா..? பார்வையாலும், பேச்சாலும், செயலாலும் வில்லத்தனத்தை காட்டினால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்களா என்கிற கேள்வி மனதில் எழத்தான் செய்கிறது.