அச்சம் என்பது மடமையடா – விமர்சனம்


விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப்பின் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்பதால் என்கிற எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் தான் ‘அச்சம் என்பது மடமையடா’..

பி.இ, எம்.பி.ஏ என நிறைய படித்துவிட்ட சிம்புவுக்கு ஜாலியாக ஊரை சுற்றிவிட்டு, நிதானமாக வேலையில் சேரலாம் என்பது எண்ணம். இந்நிலையில்தான் தங்கையின் தோழியாக சிம்புவின் வாழ்க்கையில் நுழைகிறார் மஞ்சிமா மோகன். சிம்புவின் வீட்டிலேயே மஞ்சிமா தங்க வேண்டிய சூழல் ஏற்பட, அவர் மீது காதலாகிறார் சிம்பு..

இந்நிலையில் பைக் டூர் கிளம்பும் சிம்புவிடம் தானும் வருவதாக சொல்லி சேர்ந்துகொள்கிறார் மஞ்சிமா. இந்த டூரில் காதல் டெவலப் ஆக, அப்படியே வட மாநிலத்தில் மஞ்சிமாவின் ஊரில் அவரை இறக்கிவிட செல்கிறார் சிம்பு.. வழியில் இருவரும் விபத்தில் சிக்குகிறார்கள். பலத்த அடிபட்ட சிம்புவுக்கு நினைவு திரும்ப, மஞ்சிமா அவரது ஊருக்கு சென்றிருப்பதும் அங்க அவரது பெற்றோர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பதும் தெரியவருகிறது.

தங்களை விபத்துக்குள்ளாக்கியதும் அவர்கள் தான் என்பதும் தெரியவருகிறது. ஊரிலிருந்து தனது நண்பன் சதீஷையும் வரவழைத்து, அவருடன் மஞ்சிமாவுக்கு உதவி செய்வதற்காக அவரது இடத்திற்கு விரைகிறார் சிம்பு. ஆனால் கொலைகார கும்பல், போலீஸ் உதவியுடன் இவர்கள் அனைவரையும் கொல்வதற்காக துரத்துகிறது. அவர்கள் யார், மஞ்சிமா குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவது ஏன், இந்த தாக்குதலில் இருந்து சிம்பு அன் கோவால் தப்பிக்க முடிந்ததா என்பது தான் மீதிக்கதை.

காதல் கதையாக ஆரம்பித்து போகப்போக அதிரடி ஆக்சன் ரூட்டிற்கு தாவியுள்ளார் கௌதம் மேனன். அவரது வேகத்திற்கு சிம்புவும் நன்றாகவே ஈடுகொடுத்திர்க்கிறார்.. மஞ்சிமாவை நினைத்து காதலில் உருகுவதாகட்டும், அவருக்கு ஆபத்து என்றதும் பொங்கி எழுந்து எதிரிகளை புரட்டுவதாகட்டும் ஒரு சராசரி கோபக்கார இளைஞனை பிரதிபலிக்கிறார் சிம்பு.

மஞ்சிமா மோகன் தமிழுக்கு புது வரவு. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல திகட்டாத அழகுக்கும் சிரிப்புக்கும் சொந்தக்காரராக நம்மை படம் முழுவதும் வசீகரிக்கிறார். தமிழ்சினிமாவில் மஞ்சிமாவுக்கு அருமையான இடம் காத்திருக்கிறது..

சிம்புவின் நண்பனாக வரும் சதீஷின் முடிவு பரிதாபம் தருகிறது. ஆனாலும் சதீஷுக்கு இந்தப்படம் ஒரு அப் லிப்ட் என்றே சொல்லலாம். வடக்கத்திய போலீஸ் வில்லனாக பாபா சேகல் மிரட்டுகிறார். ஒரு பாப் பாடகரை அதிரடி வில்லனாக மாற்றிய கௌதம் மேனனை பாராட்டியே ஆகவேண்டும்..

நட்புக்காக சில காட்சிகள் வந்தாலும் டேனியல் பாலாஜியின் வில்லத்தனத்தில் காரம் ஈனும் குறையவே இல்லை. படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் வழக்கமான கௌதம் மேனன் பட கேரக்டர்களே.. யாரும் சோடைபோகவில்லை..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் இனிமை என்றாலும் கோர சம்பவங்கள் நடக்கும் இடத்தில் எல்லாம் அதை நுழைத்திருக்கவேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. டேன் மெக்கார்த்தர், டேனி ரேமண்ட் என இரண்டு ஒளிப்பதிவாளர்களும் ஒரு ரோட் மூவிக்குரிய அம்சங்களுடன் ஒரு வயலன்ஸ் மூடையும் சேர்த்து அழகாக தங்கள் ஒளிப்பதிவில் கொண்டு வந்துள்ளார்கள்.

தன்னுடைய பிராண்டில் இருந்து கௌதம் மேனன் துளியும் மாறவில்லை என்பது படம் முழுக்க தெரிகிறது. குறிப்பாக இடைவேளைவரை காதல் காட்சிகளை பிரமாதமப்படுத்தி இருக்கிறார்.. இடைவேளைக்குப்பின் வில்லன்களுடன் சிம்பு மோதுவது கூட ஒகே தான்.. ஆனால் கிளைமாக்ஸில் திடீரென ட்விஸ்ட் வைக்கிறேன் என அப்படி ஒரு முடிவை கௌதம் மேனன் ஏன் எடுத்தார் என்பது தான் புரியவில்லை.. அது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆகவே அமைந்துள்ளது என்றே சொல்லலாம். மற்றபடி லவ், ஆக்சன் பிரியர்களுக்கு சமமாக சரியான தீனி போட்டிருக்கிறார் கௌதம் மேனன்.