நடிகர் விஜய் எடுத்த செல்பி – சமூக வலைதளங்களில் வைரல்!


விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது. இங்கே விஜய் மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையிலான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது வருமானவரித் துறையினர் விசாரணை நடத்துவதற்காக விஜய்யை அழைத்து சென்றது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர். இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனிடையே படப்பிடிப்பின்போது அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருபடி மேலேபோய் ரசிகர்களுடன் செல்பியே எடுத்துக்கொண்டார். படப்பிடிப்பு வேன் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி முதலில் கையசைத்தார்.

அதனையடுத்து தன்னுடைய செல்போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த விடியோ நேற்று முழுவதும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை விஜய் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.