அஜித் ரசிகர்களை ஏங்க வைத்த ரஜினி


உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பாலிசி. அதை நாம் தட்டிக்கேட்க முடியாது. அது தனிமனித சுதந்திரம். அஜித் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார். சொந்தப்படத்தின் புரமோஷனுக்கும் வர மாட்டார். அட, சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதில் கலந்து கொள்வாரா என்றால் அதுவும் நமக்கு தெரிந்தவகையில் எதுவும் இல்லை..

ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினியை பொறுத்தவரை தனது படங்களின் இசைவெளியீட்டு விழாவில் தவறாமல் கலந்துகொள்கிறார். விழாவில் படத்தை புரமோட் செய்வதுடன் தனது ரசிகர்களுக்கும் ஏதாவது உற்சாகமான செய்தி சொல்கிறார். டிவியில் பேட்டி கொடுப்பதில்லை என்கிற பாலிசியை கூட ரசிகர்களுக்காக விட்டுக்கொடுத்து டிவி நிகழ்ச்சியிலும் அவ்வப்போது கலந்து கொள்கிறார். அவர் அரசியலுக்கு வந்துவிட்டதால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அவ்வப்போது நிகழ்த்தி வருவது இன்னொரு தனி ரூட்..

ஆனால் இந்த வருடம் மட்டுமே காலா, 2.O, பேட்ட என மூன்று படங்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி ரசிகர்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார் ரஜினி. இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள், இத்தனை வயதிலும் ரஜினி தனது ரசிகர்கள் தான் உயிர்மூச்சு என செயல்படுவதை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள்.. நம்ம ‘தல’ அஜித் இப்படி ஒரு படத்திற்கு ஒருமுறையாவது நம்மிடம் தல காட்டக்கூடாதா என அஜித் ரசிகர்களை ஏங்க வைத்து விட்டது ரஜினியின் வரிசையான இசை வெளியீட்டு விழாக்கள்…

என்ன இருந்தாலும் ரசிகர்களால் வளர்ந்து தானே இன்னைக்கு ‘தல’ என்கிற பெயருடன் உயரத்தில் அமர்ந்திருக்கிறார் அஜித்.. ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்துவிட்டேனே அப்புறம் எதற்கு ரசிகர்களை சந்திக்கணும் என்கிற கேள்வி அர்த்தமற்ற ஒன்றாகவே தெரிகிறது. இந்த விஷயத்தில் ரஜினி அளவுக்கு இல்லாவிட்டாலும், நடிகர் விஜய் தனது இசைவெளியீட்டு விழாவில் மட்டுமாவது கலந்துகொண்டு தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்து வருகிறார். அந்த அளவில் அவரை நாம் பாராட்டலாம். ரஜினியை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்ட அஜித், இனி வரும் நாட்களிலாவது அவரது வழியை பின்பற்றி ரசிகர்களை சந்திக்க முயற்சி செய்யட்டும்.