அஜீத்தின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடிக்கப்படுமா..?

தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் தனது சாட்டையை வேகமாக சுழற்ற இருக்கிறது.. இதற்கு காரணம் சிறிய படமோ, பெரிய படமோ எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் எந்தவகையிலும் நட்டத்திற்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் கலைப்புலி தாணு.

அந்தவகையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தங்களது படத்திற்கு வேண்டிய ஒத்துழைப்புகளை சரியாக வழங்கவேண்டும் என்கிற விதிமுறையை கட்டாயமாக அமல்படுத்த இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் தங்களது படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்கிற நடைமுறையை இனி கொண்டுவரப்போகிறார்கள்..

ஏற்கனவே கேயார் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது ஒரு விதியை உருவாக்கினார். அதாவது விழாக்களில் கலந்துகொள்ளாத ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளத்தில் இருந்து 20 சதவீத தொகையை பிடித்தம் செய்யவேண்டும் என்றும், அப்படி செய்வதற்கு வசதியாக எந்த ஒரு முன்னணி ஹீரோவுக்குமே அவரது சம்பளத்தில் 20 சதவீத தொகையை கொடுக்காமல் நிறுத்தி வைக்கவேண்டும் என்பதுதான் அது.

இந்த விதியைத்தான் இப்போது தாணு ஸ்ட்ரிக்ட்டாக அமல்படுத்த இருக்கிறாராம். இதனால் மற்ற யாரையும் விட திரையுலக விதிகளை எந்தவித லட்சியமும் செய்யாத அஜீத்துக்குத்தான் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. காரணம் அஜீத்தின் இந்த செய்கையால் நாங்கள் மட்டும் ஏன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என இன்னும் சில நடிகர்கள் போர்க்கொடி தூக்குகிறார்களாம்.

அதனால் இந்த விஷயத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தற்போது அஜித்தை வைத்து படம் தயாரித்துவரும் ஏ.எம்.ரத்னத்தை அழைத்து, அந்தபடத்தின் இசைவிழாவில் அஜீத்தை கலந்துகொள்ள செய்யவேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்படி அஜித் கலந்துகொள்ளாவிட்டால் அவரது சம்பளத்தில் இருந்து 20 சதவீத தொகையை பிடித்தம் செய்வார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..