சமீபத்தில் நடிகை அமலாபால் புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டு முகவரியை கொடுத்து சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலாபால் நேற்று கேரளாவின் 61வது பிறந்த தினமாக கொண்டாடப்படும் கேரளா பிறவி நாளில் நவ-1ஆம் தேதி தனது செல்ல நாய்க்குட்டியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்துள்ளார். மேலும், தன்னை விமர்சித்தவர்களுக்கு நக்கலாகவும் பதிலடி கொடுத்துள்ளார் அமலாபால்.
“இந்த நேரத்தில் எனக்கு அவசியமாக இருப்பது வேடிக்கையான நகர வாழ்க்கையில் இருந்தும் தேவையற்ற யூகங்களில் இருந்தும் வெளியே வருவதுதான். அதற்காக இப்போதைக்கு படகு பயணம் செல்ல விரும்புகிறேன். அது சட்டத்தை மீறி விட்டேன் என்ற குற்றச்சாட்டாக இருக்காது என்றே நினைக்கிறேன். இதுவும் சட்டமீறலா என்று நண்பர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா?” என கேட்டுள்ளார்.
ஆனால் அவரது இந்த செயலுக்கும் விமர்சனங்கள் கிளம்பியதால் உண்மையில் நடந்தது என்ன என்கிற விளக்கத்தை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் அமலாபால். அதில் அவர் கூறியுள்ளதாவது..
“தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.