அரண்மனை பாகம் – 3 மார்ச்சில் படப்பிடிப்பு ஆரம்பம்? நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை!


வெற்றி பெற்ற படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது உலக சினிமாவிலேயே டிரெண்டாக உள்ளது. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல்வேறு படங்களின் பாகங்கள் அடுத்தடுத்து எடுக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவை பொறுத்த வரை இரண்டாம் பாகம் படங்கள் அதிகளவில் தயாராகின்றன.

சூப்பர்ஸ்டாரின் எந்திரன், 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் படம் இதுவரை 3 பாகங்கள் வெளிவந்து அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இது தவிர, திகில் பட வரிசையில் ராகவா லாரன்சின் காஞ்சனா படம் பல்வேறு பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. சுந்தர் சி.யின் அரண்மனை படம் ஏற்கனவே 2 பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது அரண்மனை பாகம் 3 எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இதில் நடிக்க நடிகர் ஆர்யாவிடமும், நாயகி ராசி கன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.