கனவை தேடி சென்ற தல ரசிகன்!!!!!

சினிமா இது கனவுகளின் தொழிற்சாலை, சிலருக்கு கனவாய் இருக்கும் தொழிற்சாலை. இங்கு உழைப்புக்கும், முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு பலரை உதாரணம் கூறலாம். பொறியியல் படிப்பு, ஐ.டி. கம்பனி வேலை… இவையனைத்தையும் துறந்து தன் கனவை தேடி சென்னை வந்து இன்று ஒரு நடிகராக உருவாகியுள்ளார் கணேஷ் பிரசாத். ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’, ‘கரையோரம்’, ‘தற்காப்பு’ பல படங்களில் நடித்து வருகிறார்.

“கோயம்புத்தூர்ல என்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பனியில் பணியாற்றி வந்தேன். எனக்கு அங்கு வேலை செய்வது நெருடலாய் இருந்தது. சின்ன வயசுல இருந்து நான் அஜித் சார் ரசிகன், எனக்கு அவர மாதிரி நடிகன் ஆகனும்தான் ஆசை. சென்னைக்கு கிளம்பிட்டேன். இங்க பல இடங்களுக்கு வாய்ப்புகள் தேடி சென்றேன். பின்னர் ஸ்டுடியோ 9 நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டே வாய்ப்புகளை தேடினேன்.“ என்று கூறினார் கணேஷ் பிரசாத்.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடிச்சிருக்கேன். இந்த படம் ஒரு காமெடி கலாட்டா பவர்ஸ்டார், சாம் அன்டர்சன் , ஜான் விஜய், சுப்பு, மனோ பாலா அண்ணன் இப்படி ஒரு பெரிய சிரிப்பு பட்டாளம். முதற்கட்ட படபிடிப்பு கொடைக்கானலில் முடிவடைந்துள்ளது, பாண்டிச்சேரி, சென்னை என படபிடிப்பை தொடர உள்ளோம்.”

“ ‘கரையோரம்’ படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒரு நாயகனாக வருகிறேன். ‘வாகை சூட வா’ இனியா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷக்தி நாயகனாக நடிக்கும் ’தற்காப்பு’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். எனக்கு புத்தகம் படிப்பது, ‘பாடி-பில்டிங்’கில் ஆர்வம் அதிகம் தினமும் ஓட்டம், உடற்பயிற்சி என கண்டிப்பாக நேரம் செலுத்திடுவேன். சவாலான, எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும் , இயக்குனர் பாலா சார் படத்தில் நடிப்பது எனது மிக பெரிய லட்சியம்.” கனவுகளை வெல்லும் வேகத்தில் கூறி முடித்தார் கணேஷ் பிரசாத்.