“உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு” – பின்னணி பாடகர் அஸ்லாம்!

நாட்டாமை படத்தில் ‘நான் உறவுக்காரன்’ பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் அஸ்லாம்.. அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவருக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இந்தியில் இசையமைத்த ‘ரங் தே பசந்தி’ படம் மூலம் புகழ் வெளிச்சம் பாய்ச்சினார். தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் சில்லுனு ஒரு காதல், வரலாறு, குரு, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.

தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் முக்கிய இடம்பிடித்த அஸ்லாம் இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்தார். அங்கே எல்லாம் கானா பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை கவனித்த அஸ்லாம் தன் பங்கிற்கு தானும் ஒரு அதிரிபுதிரியான கானா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

கானா பாடியது பற்றி அஸ்லாம் என்ன சொல்கிறார்..?

“இன்றைக்கு கானா பாடல்கள் என்பவை தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. படங்களின் புரமோஷனுக்கு கூட அவைதான் பயன்படுகின்றன. உலக அளவில் கானாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.. அதனால் நானும் கானா பாடலாம் என முடிவு செய்திருந்த நேரத்தில் என் நண்பரும் இசையமைப்பாளருமான சந்தோஷ் என்னை புதுமுகங்கள் நடிக்கும் “டுமீல் குப்பம்” என்னும் படத்திற்காக அணுகினார்.

“ஸ்ரீ பிலிம் மீடியா” தயாரிக்கும் அந்த படத்தில் “மரண அடி அடிச்சாயே பெண்ணே” என்ற கானா பாடலை பாடியுள்ளேன். அந்த பாடலுக்காக சந்தோஷ் எழுதியிருந்த வரிகள் என்னை ரொம்பவே கவர்ந்தன. .குறிப்பாக,

“சென்ட்ரல் ஸ்டாண்டுனா ஓட்டேரிதான்

உன் கூட சுத்துற வேலைக்கு நா ரெடிதான்

காசிமேடு கப்பலு பாசிபோல

லைப்புலாங்கு ஓட்டனும் ஒங்கூடவே..”

என சென்னை ஏரியாவை ரவுண்டப் பண்ணி பாடல் எழுதியுள்ளார் சந்தோஷ்.. இவர் ஏற்கனவே மாலுமி படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடல் எழுதியவர் தான்.. இந்த கானா பாடல் எனது இன்னொரு பரிமாணத்தை காட்டும்”. என்கிறார் அஸ்லாம் உறுதியாக.