ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தனயன்’. இந்தப்படத்தில் கதாநாயகனாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை N.J.சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சதீஷ் வேறு யாருமல்ல.. சாட்சாத் ஜெய் ஆகாஷே தான். ஆம். தனது சொந்தப்பெயரில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஜெய் ஆகாஷ்.
கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். யு.கே.முரளி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது..
இயக்குனர் கே.பாக்யராஜ் வாழ்த்தி பேசியபோது ஜெய் ஆகாஷ் குறிப்பிட்ட அந்த ‘நல்ல நேரம்’ பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.
நடிகர் விக்ரம் நடித்த சேது படத்தை ரிலீசிற்கு முன் பார்ப்பதற்கு அழைத்தார்கள்.. அப்போது என்னுடன் ஒரு பெண்மணி ஆவலாய் அமர்ந்து படம் பார்த்தார். படம் முடிந்ததும் சார், இந்தப்படம் எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு நான் விக்ரமிற்கு இது முதல் படமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாம விக்ரமுக்கு பதிலா வேற யாராவது நடிச்சிருந்தாலும் கூட நல்லாத்தான் இருக்கும்னு சொன்னேன்..
உடனே அவங்க போங்க சார்.. விக்ரமுக்கு மட்டும் தான் இந்த கேரக்டர் செட்டாகும்னு சொல்லிட்டு போனாங்க.. அப்புறம் தான் தெரியவந்தது.. அவங்க விக்ரமோட மனைவின்னு.. என் நேரம் அவங்ககிட்டயே அப்படி சொல்ல வச்சிருக்கு.
நடிகர் விக்ரம் அப்படி பல வருட போராட்டத்தில் தனக்கு ஏற்பட்ட பல தோல்விகள், தடைகளை தாண்டித்தான், இன்று மிகப்பெரிய ஹீரோவாக வலம்வருகிறார். அதேபோல ஜெய் ஆகாஷுக்கும் அவரது நேர்மையான உழைப்புக்கான பலன் விரைவில் கிடைத்தே தீரும்” என்றார் பாக்யராஜ்