ஒவ்வொரு முறை மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்யும்போதெல்லாம், அந்தப்படங்களின் ஒரிஜினலை விரும்பி பார்த்தவர்களுக்கு தூக்கம் தொலைந்து போய்விடுகிறது. அந்த அளவுக்கு நம்ம ஊர் ஆட்கள் மலையாள படங்களை கொத்தி கூறுபோட்டு விடுகின்றார்கள்.
சம்பந்தப்பட்ட மலையாள இயக்குனரே தமிழிலும் இயக்கும்போதுதான் ஓரளவு படத்தின் மானம் கப்பலேறாமல் தவிர்க்கப்படுகிறது. அந்த வகையில் கமலின் ‘பாபநாசம்’ படமும், ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ படமும் அதன் ஒரிஜினல் இயக்குனர்களே இயக்குவதால் நமக்கு பரம நிம்மதி. தவிர அந்தந்த கேரக்டர்களுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நடிகர்களும் சரியாக பொருந்துகிறார்கள்.
ஆனால் இப்போது ‘பெங்களூர் டேய்ஸ்’ படம் ரீமேக்காகிறது இல்லையா..?. இதில் என்ன கொடுமை என்னவென்றால் மலையாளத்தில் நஸ்ரியா நடித்த கேரக்டரில் இங்கே நடிக்கிறார் வருத்தப்படாத நாயகி ஸ்ரீதிவ்யா. ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தை பொறுத்தவரை நஸ்ரியாவின் உயிரோட்டமான துறுதுறு நடிப்பும், விதவிதமான எக்ஸ்பிரசன்களும் தான் அந்த கேரக்டரை தாங்கி பிடித்தன.
ஆனால் நம்ம ஸ்ரீதிவ்யா பாப்பாவோ, தனது முதல் படத்தை தவிர்த்து ஜீவா, வெள்ளைக்கார துரை, சமீபத்தில் வெளியான காக்கி சட்டை ஆகிய மூன்று படங்களிலும் மைதாமாவு பொம்மை போல ஒரேவிதமான எக்ஸ்பிரசன்களோடு வந்து போனார். இந்த மூன்று படங்களில் ஸ்ரீதிவ்யா தனியாக வரும் காட்சிகளை போட்டுக்காண்பித்தால் அது எந்தப்படம் என உங்களால் சரியாக சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒரேமாதிரி தான் இருக்கும்.
இவரை எப்படி நஸ்ரியாவின் கேரக்டருக்கு செலக்ட் பண்ணினார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. சரி படத்தையாவது மலையாள இயக்குனர் இயக்குகிறாரா என்றால் அதையும் தெலுங்கு இயக்குனர் ஒருவர் தான் இயக்குகிறார். சரி, ஒரிஜினலை கெடுப்பது என முடிவுசெய்தபின் அதை யார் செய்தால் என்ன..? யாரை வைத்து செய்தால் என்ன?