பிக்பாஸ் vs பெப்சி ; கமல் கவனிப்பாரா..?


’பிக் பாஸ் ஷூட்டிங்கில் பெஃப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்துவதில்லை’ என்கிற பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கமல் கலந்து கொள்ளும் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பெஃப்சி தொழிலாளர்கள் புகுந்து ஷூட்டிங்கை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி என்ன சொல்கிறார்..? ‘’பிக்பாஸ் முதல் சீசனின் போதே பெஃப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான செட் அப். தமிழ்நாட்டு டெக்னீஷியன்களுக்கு புடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த சீசன்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் தமிழ் சினிமாவிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது.

ஆனால் இந்த சீசனில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்தாண்டை விட மோசமாக 10 சதவிகிதம் பேர் மட்டுமே பெஃப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது.கேட்டதற்குச் சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். கோடிக் கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நம்மூர் தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்னை?. தமிழர்கள் நிகழ்ச்சியைக் கண்டு களித்து ஆதரவு தரவேண்டும், ஆனால் தமிழ் சினிமா ஆட்களுக்கு வேலை கிடையாது என்றால் என்ன அர்த்தம்?” என பொங்குகிறார்..

நியாயம் தானே கமல் இதில் உடனே தலையிட்டு நல்ல தீர்வை கொண்டுவரவேண்டும்.