பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..
மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி.. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச்சொல்வார்.. அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார். நான் உட்பட எத்தனையோ பேர் அவரை ஹீரோவா நடிங்கன்னு சொன்னபோது எல்லாம் மறுத்துவிட்டார்.. அப்படிப்பட்டவர் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றால் நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும். இந்தப்படத்தை பார்க்கும்போது தினேஷ் மாஸ்டர் ரியலிஸ்டிக்கா நடிச்சிருக்கார்” என்றார்